இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான சஷி தரூர் கொழும்பில் ஆரம்பமாகியுள்ள இலக்கிய விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டார்.
நாட்டின் முதலாவது சர்வதேச மும்மொழி இலக்கிய விழாவாக ஏற்பாட்டாளர்கள் இதனை வரையறுக்கின்றனர்.
சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம விருந்தினரான பங்கேற்றார்.
நேற்றைய தினம் ஆரம்பமான இந்த இலக்கிய திருவிழா எதிர்வரும் 29ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளுக்கும் சம முன்னுரிமை வழங்கும் வகையில் சர்வதேச மற்றும் உள்நாட்டு எழுத்தாளர்கள், கவிஞர்கள், கல்வியலாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் வாசகர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த இலக்கிய விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலக்கிய ரீதியாக இலங்கையின் அடையாளத்தை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல இந்த நிகழ்வு வழிவகுக்குமென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதன்போது தெரிவித்தார்.
இலக்கிய விழா இடம்பெறும் காலப்பகுதியில் இலக்கிய கலந்துரையாடல்கள், நூல் வெளியீடு, படைப்பாற்றல்மிக்க செயலமர்வுகள், திரைப்படங்களின் திரையிடல் , கலாசார நிகழ்வுகள், இசை நிகழ்வுகள் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
