முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது.
போதுமான உளவுத்துறைத் தகவல்கள் கிடைத்தும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றச்சாட்டுகளுக்கான தீர்ப்பை அறிவிக்கும் போதே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு குறித்த வழக்கிலிருந்து பிரதிவாதிகள் இருவரையும் விடுவித்து விடுதலை செய்ய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் தீர்மானித்திருந்தது.
அதற்கு எதிராகச் சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேல்முறையீடு தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமையவே, இவ்வழக்கின் பிரதிவாதிகளின் சாட்சியங்களைக் கோரும் நடவடிக்கைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
