-லத்தீப் பாரூக்
கடந்த மாதம் அமெரிக்க செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழுவில் உரையாற்றிய அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத், ஈரான் மீதான அமெரிக்கப் போரின் செலவு 37.5 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக உள்ளது.
இது முந்தைய பொது மதிப்பீடுகளை விட கிட்டத்தட்ட 8 பில்லியன் டொலர் அதிகரிப்பைக் குறிக்கின்றது, என்ற தகவலைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மக்களின் வரிப் பணத்தில் இவ்வளவு பெரிய தொகை அமெரிக்கர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுவதற்காக செலவிடப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் துரதிஷ்டவசமாக அதற்கு மாறாக இன்னொரு நாட்டின் தலைவர், இராணுவ வீரர்கள், எந்த வகையிலும் பாதிப்பில்லாத பள்ளிக் குழந்தைகள், மற்றும் அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவிப்பதற்கும், இதே அமெரிக்காவால் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக மனிதாபிமானமற்ற தடைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஈரானில் கட்டிடங்கள், பள்ளிகள், வீதிகள், பாலங்கள், அடிப்படை வசதிகளை வழங்கும் உள்கட்டமைப்புக்கள் மற்றும் மருத்துவமனைகளை குண்டுவீசி அழிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள பண்டைய நாடான ஈரான், அமெரிக்காவிற்கு எந்த வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை.
எவ்வாறாயினும், சியோனிச யூத இனவாத தாக்குதல்களைத் தூண்டும், காலனித்துவ குடியேற்ற நாடான இஸ்ரேல் இந்த போரை விரும்பியது. அமெரிக்கா இஸ்ரேலுக்காக இந்தப் போரை தொடங்கியது.
காரணம் அமெரிக்க அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் சியோனிச கோடீஸ்வர யூத சக்திகளால் தான் பதவியில் அமர்த்தி அழகு பார்க்கப்படுகின்றன. அதேபோல் இதே சக்திகளால் தான் பதவிகளில் இருந்து நீக்கவும் படுகின்றன.
ஈரானைத் தாக்கும் இந்த கொடூரமான குற்றத்தை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தன்னை அதிகாரத்தில் அமர்த்திய கோடீஸ்வர சியோனிச யூத எஜமானர்களை, சந்தோஷப்படுத்துவதற்காகச் செய்து கொண்டிருக்கின்றார்.
உலகின் ஒரே வல்லரசு என்று அழைக்கப்பட்ட அமெரிக்காவின் இன்றைய வெட்கக் கேடான நிலைமை இதுதான். அதன் 250 ஆண்டுகால வரலாறானது, உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மக்களை கொல்வது மற்றும் அழிவுகளை ஏற்படுத்தியது என்ற மோசமான தடயங்களையே மட்டுமே கொண்டுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் அரபு மற்றும் முஸ்லீம் உலக நாடுகளை பலவீனப்படுத்தி, தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, மத்திய கிழக்கில் இஸ்ரேல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக, இதுவரை அமெரிக்காவும் அவர்களின் இங்கிலாந்து-ஐரோப்பிய கூட்டாளிகளும் பல முஸ்லீம் நாடுகளை அழித்து, மில்லியன் கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்தும் உள்ளனர்.
அமெரிக்க செனட் நிதி ஒதுக்கீட்டுக் குழுவில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெட், பென்டகனின் ஆயுதக் களஞ்சியத்தை மீள் வடிவமைப்பதற்கும் வரவுசெலவுத் திட்ட பற்றாக் குறையைத் தவிர்ப்பதற்கும் ஒரு “அவசர, தேவை” நடவடிக்கையாக யுத்த செலவுகளை ஈடுகட்ட மேலும் 67 பில்லியன் டொலர் தேவை என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
பீட் ஹெக்ஸெத் இந்த தொகையை செனட் உறுப்பினர்கள் முன்னிலையில் உறுதிப் படுத்தினார். இதில் நடப்பு நிதியாண்டின் இறுதி வரையான செலவுகள் மற்றும் மதிப்பிடப்பட்ட செலவுகள் அடங்கும் என்றும் குறிப்பிட்டார்.
ஏதோ காரணங்களை முன்வைத்து யுத்தங்களை உருவாக்க, அரசியல்வாதிகளுக்கு அடிக்கடி லஞ்சம் வழங்கும் அமெரிக்க-ஐரோப்பிய ஆயுதத் தொழில் துறையினருக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, பலஸ்தீன மக்களின் இரத்தத்தில் ஊரிய ஒரு போர்க் குற்றவாளி. பலஸ்தீன மக்களை தாராளமாகக் கொல்லும் சுதந்திரமான அதிகாரம் அவருக்கு அமெரிக்க-இங்கிலாந்து-ஐரோப்பா மற்றும் அரபு சர்வாதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது. அதை அவர் வெற்றிகரமாக நிறைவேற்றி வருகின்றார்.
அமெரிக்க நிர்வாகத்தை மோதலுக்குள் அவரே சூட்சுமமாக இழுத்து வந்தார். இந்த யுத்தம் உண்மையான அமெரிக்கப் பாதுகாப்பு நலன் மற்றும் தேவையை மையப்படுத்தியது அல்ல. இது முழுக்க முழுக்க இஸ்ரேலிய பாதுகாப்பு இலக்குகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது என்பதையே இன்றைய நிலைமைகள் சுட்டிக் காட்டுகின்றன.
ஆனால் இஸ்ரேலின் இலக்குகளை தவிடுபொடியாக்கி, தனக்கான உள்நாட்டு ஆதரவை ஒன்றிணைத்துக் கொண்டு, அதே வேளையில் ஆரம்ப கட்ட இராணுவத் தாக்குதல்களையும் சமாளித்துக் கொண்டு, அதன் ஆட்சியையும் தக்க வைத்துக் கொண்டு, ஈரான் இந்தப் போரை மிக இலாவகமாகக் கையாண்டு வருகின்றது.
ஏறக்குறைய 93 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட, ஈரான் போன்ற ஒரு நாட்டின் மீது, ஒரு முழு அளவிலான தரைவழி படையெடுப்பு நடத்தப்படாமல், மட்டுப்படுத்தப்பட்ட அளவான அமெரிக்க துருப்புக்களைக் கொண்டு, அவர்களைக் கையாள நினைப்பது சாத்தியமற்றது என்றும் அமெரிக்க செனட் சபையில் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த விசாரணைகளின் போது ஜனநாயகக் கட்சியின், நியூயோர்க் பிரதிநிதி செனட்டர் கிர்ஸ்டன் கில்லிபிராண்ட், அமெரிக்க குடிமக்கள் தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க முடியாது தவித்துக் கொண்டிருக்கும் தருணத்தில், ட்ரம்ப் நிர்வாகம் காங்கிரஸிடமிருந்து, வெடிகுண்டுகளுக்காக வரம்பற்ற பணத்தை கோருவதாக குற்றம் சாட்டினார்.
அதே நேரத்தில் ஏற்கனவே வெற்றி பெற்று விட்டதாக ஜனாதிபதி அறிவித்துள்ள ஒரு யுத்தத்துக்கு ஹெக்ஸெத் ஏன் பல்லாயிரக்கணக்கான டொலர்களை மீண்டும் கேட்கின்றார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த விசாரணை ஹெக்ஸெத்துக்கும் ஜனநாயகக் கட்சி செனட்டர் கெரி பீட்டருக்கும் இடையிலான கடும் கூச்சல் குழப்பங்களோடு முடிவடைந்தது. ஹெக்ஸெத் ஒரு தோல்வி கண்ட நபர் என்று கெரி பீட்டர் குறிப்பிட்டார். மேலும் ட்ரம்ப் நிர்வாகம் “என்றென்றும் யுத்தம்” என்ற நிலையை உருவாக்கியுள்ளது என்றும் அவர் சாடினார்.
ஈரான் மீது ட்ரம்ப்பின் சுய விருப்பில் தொடங்கப்பட்ட சட்ட விரோதமான போர், அமெரிக்க குடும்பங்கள், அமெரிக்க படை வீரர்கள், மத்திய கிழக்கில் உள்ள பொதுமக்கள், அமெரிக்காவின் உலகளாவிய நலன்கள், சுற்றுச்சூழல் மற்றும் உலகப் பொருளாதாரம் என்பனவற்றின் மீது கடுமையான தாக்கங்களையும், செலவுகளையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றது.
ட்ரம்பினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த யுத்தம், குறுகிய காலத்தில் ஏற்படுத்தியுள்ள தீங்குகளின் அளவை இப்போதைக்கு மதிப்பிடுவதும் கடினமாகும்.
ஜூன் 17 போர் நிறுத்த சரிவுடன் ஈரானும், ட்ரம்ப் நிர்வாகமும் ஹோர்முஸ் நீரிணையின் முற்றுகைகளை மீண்டும் அமுலுக்கு கொண்டு வருவதாக அறிவித்தன.
மேலும் ஜனாதிபதி ட்ரம்ப் ஹோர்முஸ் வழியான கப்பல்கள் மீதான கட்டணங்கள் பற்றி முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புக்களையும் விடுத்தார். இவற்றின் காரணமாக இந்த போர் தொடர்பான செலவுகள் அனைத்தும் வரும் நாட்களிலும், வாரங்களிலும் தொடர்ந்து குவிந்து கொண்டே இருக்கும் என்று சம்பந்தப்பட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
அமெரிக்காவில் உள்நாட்டு பொருளாதார செலவு;
அமெரிக்காவில் ஈரான் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் தாக்குதல்களுக்கு முன்பு இருந்ததை விட எரிபொருளுக்கான விலைகள் அதிகமாகி உள்ளன. ஜூலை 14 ஆம் திகதி நிலவரப்படி, ஈரான் மீதான யுத்தம் தொடங்கியதில் இருந்து எரிவாயு மற்றும் டீசலுக்கான செலவாக அமெரிக்கர்கள் 68 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை மேலதிகமாக செலுத்தியுள்ளனர்.
பிரவுன் பல்கலைக்கழகத்தின் ஈரான் போர் எரிசக்தி செலவு கண்காணிப்பு மையம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. குடும்ப ரீதியாகப் பார்க்கையில் இது ஒரு குடும்பத்துக்கு 500 டொலருக்கும் அதிகமான மேலதிக செலவை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு மற்றும் டீசல் விலைகள் போருக்கு முன் இருந்ததை விட சுமார் 30 சதவீதம் அதிகமாகி உள்ளன. வழக்கமான பெட்ரோலுக்கான தேசிய சராசரி விலை ஜூலை 14 ஆம் திகதி ஒரு கலனுக்கு 3.86 டொலராக இருந்தது. இது பெப்ரவரி 27 அன்று 2.98 டாலராக இருந்தது என்று மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன..
அதிகரித்து வரும் யுத்த பதற்றங்களுக்கு மத்தியில் எண்ணெய் விலைகளும் அதிகரித்து வருவதன் விளைவாக, எரிவாயு விலைகளும் அதிகரித்து வருகின்றன. இந்த விலைகள் விரைவில் எந்த நேரத்திலும் குறையலாம் என்பதற்கான வாய்ப்பே இல்லை. அமெரிக்க எரிசக்தி துறை செயலாளர் கிறிஸ் ரைட் எரிவாயுவின் விலை 3 டொலருக்கும் கீழே சரிவடையும் நிலை அடுத்த ஆண்டு வரை நடக்காது என்று கடந்த ஏப்ரல் மாதத்திலேயே குறிப்பிட்டிருந்தார்.
ஈரான் மீது அமெரிக்கா தொடுத்துள்ள இந்த யுத்தம் தெளிவான வெளியேறும், மூலோபாயங்கள் எதுவும் இல்லாத ஒரு தவறான மூலோபாய கணிப்பீடு, என்று முன்னணி பேராசிரியர்கள் மற்றும் கல்வி சார் வல்லுநர்கள் வாதிடுகின்றனர். இப்போது இது ஒரு விரிவான பிராந்திய மோதலாக உருவெடுத்து வருகின்றது. பற்றி எரியும் அபாயங்கள் பரவலாகி வருகின்றன. சர்வதேச சட்டங்களும் கடுமையான விதத்தில் சேதமாக்கப்பட்டும் மீறப்பட்டும் வருகின்றன.
அமெரிக்காவை எவராலும் ஒரு போதும் தோற்கடிக்க முடியாது என்ற கருத்துக்கு ஒரு உண்மையான முடிவை இந்த மோதல் தந்துள்ளது என்று சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர் ராபர்ட் பேப் கூறுகின்றார். செலவு குறைவான துல்லியமான ஆயுதங்களை நோக்கிய மாற்றம், உள்ளூர் மக்களை அந்நியப்படுத்துவது, “என்றென்றும் போர்” என்ற நிலைக்கு இந்த மோதலை விரிவு படுத்துவது என்பன நீண்டகால அடிப்படையில் அபாயம் மிக்கவை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எந்த விதமான தெளிவான மாற்றுத் திட்டங்களும் அற்ற நிலையில், அமெரிக்கா ஏற்கனவே இந்தமோதலின் மூலோபாயத்தை இழந்துவிட்டது என்று சிகாகோ பல்கலைக்கழகத்தின் மற்றொரு பேராசிரியர் ஜான் மியர்ஷைமர் கூறுகின்றார்.
உலகளவில் தனது கௌரவத்தை மற்றவர்கள் குறைத்து மதிப்பீடு செய்யும் நிலையை அமெரிக்கா தோற்றுவித்துள்ளது. மேலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிடுவதற்கான மூல வேரைக் கண்டு பிடிக்கும் ஒரு போரினால் அமெரிக்கா உறிஞ்சப்பட்டு வருகின்றது என்று மார்க் ஜூர்ஜென்ஸ்மேயர் என்ற பேராசிரியர் கூறி உள்ளார்.
இவர்களோடு சேர்த்து 100 அமெரிக்க சட்ட பேராசிரியர்களையும் அறிஞர்களையும் கொண்ட குழு கூட்டு எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
ஈரான் மீதான ஆரம்ப கட்ட கூட்டுத் தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் சாசனத்தை முழுமையாக மீறியுள்ளதாக தமது கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் சாத்தியமான வரம்பு மீறல்கள் குறித்தும் தமது ஆழ்ந்த கவலைகளை வெளியிட்டுள்ளனர்.
“இந்த அறிக்கையில் ஒப்பமிட்டுள்ள, அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச சட்ட வல்லுநர்கள், பேராசிரியர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களாகிய நாங்கள், மத்திய கிழக்கில் தற்போதைய ஆயுத மோதலில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் என்பனவற்றின் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்கள் மற்றும் அவை வெளியிட்டு வரும் ஆபத்தான சொல்லாடல்கள் குறித்த எமது ஆழ்ந்த கவலையை இதன் மூலம் வெளிப்படுத்துகின்றோம்.
ஒவ்வொரு நாளும் 1-2 பில்லியன் வரையான அமெரிக்க டொலர் செலவை அமெரிக்க வரி செலுத்துவோருக்கு ஏற்படுத்தும் இந்தப் போர், பிராந்தியத்தில் உள்ள பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க தீங்குகளையும் விளைவிக்கின்றது.
இதன் விளைவாக மத்திய கிழக்கு முழுவதும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார பாதிப்புக்களையும் மக்கள் அனுபவிக்கின்றனர்.
நாம் கோடிட்டுக் காட்டியுள்ள விடயங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள், மத்திய கிழக்கில் உள்ள பொதுமக்களுக்கு கடுமையான தீங்குகளை விளைவிக்கின்றன. அவை மோதலை தீவிரப்படுத்துவதற்கும், சுற்றாடல் மற்றும் உலகப் பொருளாதாரத்தை சேதப்படுத்துவதற்கும் பங்களிக்கின்றன.
அவற்றால் சட்டத்தின் ஆட்சி இழிவு படுத்தப்படும் ஆபத்தும் உள்ளது. இற்றால் நாங்கள் பெரும் கவலைக்கு ஆளாகி உள்ளோம். சம்பந்தப்பட்ட தரப்புக்களின் சிரேஷ்ட அதிகாரிகளின் பகிரங்க அறிக்கைகள், அந்தந்த நாடுகளின் அரசுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள, தத்தமது நாடுகளின் பொதுமக்கள் மற்றும் ஆயுதப் படைகளின் உறுப்பினர்களைப் பாதுகாக்க உதவும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் விதிகளுக்கு ஆபத்தான அவமரியாதையை ஏற்படுத்துகின்றன என்பதையும் இதன் மூலம் சுட்டிக் காட்டுகின்றோம். என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ. நா. சாசனம், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சட்டங்களை எல்லா நேரங்களிலும் எல்லா மட்டங்களிலும் நிலை நிறுத்துமாறும், சர்வதேச சட்டத்தின் விதி முறைகள் மீதான அமெரிக்க உயர் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு மற்றும் மரியாதை என்பனவற்றை பகிரங்கமாக தெளிவு படுத்துமாறும் 100 அறிவு ஜீவிளைக் கொண்ட இந்தக் குழுவினர் அமெரிக்க அரசாங்க அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.
டிரம்பின் கொள்கைகளையும் நிகழ்ச்சி நிரலின் பெரும் பகுதியையும் வடிவமைத்த ஹெரிடேஜ் மன்றம் என்ற அமைப்பு, இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது உதவியை படிப்படியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது என்பதை கட்டுரையாளர் டாக்டர் சானியா பைசல் எல்-ஹுசைனி, சுட்டிக் காட்டி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
1948 முதல், இஸ்ரேலுக்கான ஆதரவு என்பது அமெரிக்காவில் உள்ள இரு முக்கிய கட்சிகளுக்கும் இடையிலான உடன்பாட்டின், ஒரு முக்கிய புள்ளியாக இருந்து வருகின்றது. ஜனநாயகக் கட்சிக்குள் இஸ்ரேலின் புகழ் படிப்படியாக வீழ்ச்சியடைந்தது. ஆனால் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவுக்கும் மற்றும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கும் எதிராக 2015ல் அமெரிக்க காங்கிரசில், நெதன்யாகு நிகழ்த்திய உரை அந்த வீழ்ச்சியை ஆழப்படுத்துவதில் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது.
இன்று, அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான, மிகவும் சிறப்பு மிக்க உறவுகள் தொடர்பில் வழமைக்கு மாறான விதத்தில், குடியரசுக் கட்சி, வலதுசாரி பிரிவு மற்றும் தேசியவாதிகளிடையே ஆதரவு கணிசமாகக் குறைந்து வருவதை நாம் கண்கூடாகக் காண முடிகின்றது. பல தசாப்தங்களாக இஸ்ரேலின் வலிமையான மற்றும் மிகவும் உறுதியான ஆதரவாளராக குடியரசுக் கட்சி இருந்தது.
ஆனால் ஏற்கனவே தொடங்கிய ஒரு விரிவான பிளவின் காரணமாக, அமெரிக்க-இஸ்ரேல் கூட்டணி அந்தக் கட்சிக்குள் முன்பு இருந்ததைப் போல இனிமேலும் வலுவான நிலையில் இல்லை.
ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி என்பனவற்றின் அமெரிக்க தலைவர்கள் இந்த பிளவுகளை ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த பிளவு படிப்படியாக விரிவடைந்து, 1948 க்குப் பிறகு முதல் முறையாக இஸ்ரேலை நோக்கிய அமெரிக்க கொள்கையில் மாற்றத்திற்கு வழிவகுக்கக் கூடும் என்று டாக்டர் சானியா பைசல் எல்-ஹுசைனி மேலும் கூறி உள்ளார்.
