ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை இன்று (7) முன்வைக்கப்படவுள்ளது.
இன்று ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தொடர் ஜெனிவா நேரப்படி இன்று காலை 10.00 மணிக்கு இந்தோனேசியாவின் தூதுவர் சித்தார்தோ ரெசா சூர்யோடிபுரோ தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
ஆரம்பக் கூட்டத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) உரையாற்றவுள்ளார்.
ஒரு மாதம் நீடிக்கும் இக்கூட்டத்தொடரில், விசேட நடைமுறைகளின் ஆணை பெற்றவர்கள், நிபுணர் பொறிமுறைகள் மற்றும் புலனாய்வுப் பொறிமுறைகளை உள்ளடக்கிய 37 ஊடாடும் கலந்துரையாடல்களை பேரவை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், உயர்ஸ்தானிகர், மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் மற்றும் புதுப்பிப்புகள் குறித்தும் இக்கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும்.
இந்தக் கூட்டத்தொடரின் போது பரிசீலிக்கப்படவுள்ள விடயங்களில், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் எழுத்துமூலமான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையானது ஏற்கனவே வௌியாகியுள்ள நிலையில், மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்கும், நல்லிணக்கம் மற்றும் சமூக ஆற்றுப்படுத்தலை முன்னெடுப்பதற்கும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025 ஒக்டோபர் முதல் 2026 ஜூலை வரையான காலப்பகுதியை உள்ளடக்கிய இந்த அறிக்கையானது, ஊழலைச் சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அரசியல் கொலைகள், பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டமை மற்றும் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான முக்கிய கைதுகள் மற்றும் விசாரணைகள் குறித்துக் சுட்டிக்காட்டுகிறது.
