நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக, நாடு முழுவதிலும் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு சுமார் 47.3 சதவீதமாகக் குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களில் தற்போது 34.4 சதவீத நீர் மட்டுமே எஞ்சியுள்ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் எச். எம். பி. எஸ். டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் கணிசமாகக் குறைந்து, சராசரியாக 20 சதவீதமாக பதிவாகியுள்ளது.
தற்போதைக்கு எஞ்சியுள்ள நீரைக் கொண்டு சிறுபோக விவசாய நடவடிக்கைகளை முழுமையாக நிறைவு செய்யவும், அடுத்த மழைக்காலம் வரை குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யவும் முடியும் எனத் திணைக்களம் உறுதியளித்துள்ளது.
அதிக வெப்பம் காரணமாக நீர் ஆவியாதல் அதிகரித்துள்ளதால், விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகளுக்கு நீரைக் கவனமாகவும் சிக்கனமாகவும் பயன்படுத்துமாறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்கான திட்டமிடல்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. மழைவீழ்ச்சி மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டத்தைக் கருத்தில் கொண்டு, விவசாயக் கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு அமைவாக பெரும்போகச் செய்கை விரைவில் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
