காலி – உனவட்டுன, ருமஸ்ஸல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் அதிபர், இரண்டு மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்காக ரூ. 2,50,000 லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் திங்கட்கிழமை (07) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் தாயாரால் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காலி – ஹபராதுவ பகுதியில் உள்ள பிரபல கடை ஒன்றில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அஹங்கம பகுதியைச் சேர்ந்த இந்த அதிபர், 2026 ஆம் ஆண்டில் மாணவர்களை 1 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளில் சேர்ப்பதற்காக ஆரம்பத்தில் ரூ. 600,000 கோரியுள்ளார். பின்னர் இந்தத் தொகை ரூ. 300,000 ஆகக் குறைக்கப்பட்டு, முன்பணமாக ரூ. 150,000 அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், எஞ்சிய பணத்தைக் கேட்டு சந்தேக நபர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்ததாகவும், பணத்தைத் தராவிட்டால் பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து நீக்கிவிடுவதாக மிரட்டியதாகவும் தாய் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, எஞ்சிய ரூ. 250,000 லஞ்சத் தொகையைப் பெற்றுக் கொண்டிருந்தபோது அதிபர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார். அவர் காலி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
