இலங்கையில் அமெரிக்க-இஸ்ரேலிய இந்திய தரப்பின் இருப்புக்கள், முஸ்லிம்கள் தொடர்பான NPP அரசின் கொள்கையில் செல்வாக்கு செலுத்துகின்றதா??

Date:

லத்தீப் பாரூக்

இலங்கையின் முன்னாள் பிரதம மந்திரி காலஞ்சென்ற திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான, ஐக்கிய முன்னணி அரசாங்கம், 1970 மே இல் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்ற உடனேயே, அவரது செவிகளில் விழுந்த மற்றும் மேசைக்கு வந்த ஒரு செய்தி, நாட்டில் சோசலிச அரசாங்கம் ஒன்றை நிறுவும் நோக்கில் இடதுசாரி இளைஞர்கள், தென் பகுதியில் பொலிஸ் நிலையங்களையும் சில வங்கிகளையும் தாக்கி வருகின்றார்கள் என்பது தான்.

அப்போது நான் பணி புரிந்து கொண்டிருந்த சண்டே ஒப்சர்வர் பத்திரிகைக்கு புதிதாக உருவெடுத்துள்ள இந்த விடயங்கள் பற்றி ஒரு கட்டுரையை எழுதுவதற்காக, அது குறித்த மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள நான் ஆர்வமாக இருந்தேன்.

அன்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) இன் பிரதான அமைப்பான தேசப்பிரேமி மாணவர் முன்னணியின் தலைவராகவும், பிற்காலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்த, மஹிந்த விஜேசேகராவை, பொரல்ல பிரதேசத்தில் உள்ள வனாதமுல்ல என்ற இடத்தில், ஒரு நாள் இரவு வேளையில் இது சம்பநதமாக சந்தித்தேன். அப்போது அவருடன் இரண்டு இளம் பௌத்த பிக்குகளும் இருந்தனர்.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூடுவது, இந்த நாட்டில் ஐரோப்பிய காலனித்துவத்தின் அடையாளங்களாகக் காணப்படும்   அனைத்து தேயிலைத் தோட்டங்களையும் வேரோடு பிடுங்குவது, என்பன உட்பட முதலாளித்துவத்துடன் தொடர்புடைய அனைத்தையும் அழிக்க இந்த நாட்டின் இளைஞர்கள் விரும்புவதாக, அன்று அவர் என்னுடன் நடத்திய கலந்துரையாடலின் போது கூறினார்.  இந்த விடயங்கள் சம்பநதமான ஒரு ஆழமான பார்வையை வழங்கும் என்னுடைய கட்டுரை 1970 ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் சண்டே ஒப்சர்வர் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

1971 ஏப்ரலில் ஜே. வி. பி. யின் வன்முறை எழுச்சி நாட்டை உலுக்கியது. இந்தக் கிளர்ச்சியை பகுப்பாய்வு செய்த, அன்றைய  புகழ்பெற்ற வழக்கறிஞரும், மூத்த இடதுசாரி அரசியல் வாதியுமான டொக்டர் கொல்வின் ஆர்.டி. சில்வா “April 1971-A foredoomed Ultra leftist Adventure”. ‘ஏப்பிரல்-1971 முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட தீவிர இடதுசாரி சாகசம்’ என்ற தனது நூலில் ஒரு விரிவான விவரத்தை வழங்கி இருந்தார்.

அதன் பின். 1977 ஜூலை 21 தேர்தல்களில் ஜே. ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அன்றிருந்த 168 நாடாளுமன்ற ஆசனங்களில் 140 இடங்களைப் பெற்று மகத்தான வெற்றியீட்டியது.

ஜே. ஆரின் அரசாங்கம் திறந்த பொருளாதாரக் கொள்கைகளின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்று,  பொருளாதார நிவாரணத்தைக் கொண்டு வந்தது. மேலும் அவர் அறிமுகம் செய்த ஜனாதிபதி ஆட்சி முறையிலான அரசியலமைப்பு நாட்டை தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரமாக மாற்றியது.

தமிழ் மக்கள் மத்தியில் நீண்ட நாற்களாக நீடித்து வந்த பல பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் செவிசாய்க்க பதவியில் இருந்த அரசுகள் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், 1983 ஜூலை மாதத்தில் நாடு தழுவிய விதத்தில் தூண்டி விடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலவரங்கள், அரசுக்கு எதிரான ஆயுதமேந்திய தமிழ் பிரிவினைவாத இயக்கங்களின் போராட்டத்துக்கு வழிவகுத்தன.

இது இந்தத் தீவை ஒரு கொலை களமாக மாற்றியது. இந்த நாட்டின் தலைவிதியை பல தசாப்தங்களுக்கு முடக்கி வைத்திருந்ததும் இதே உள்நாட்டு போர்தான்.

30 ஆண்டுகாலம் நீடித்து, அழியாத பல வடுக்களை ஏற்படுத்திய இந்தப் பிரிவினைவாதப் போரின் முடிவு, சமூகங்களை ஒன்றிணைக்கவும், ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்தவும், ஒரு நிலையான நாட்டை நோக்கி அணிவகுக்கவும் பொன்னானதோர் வாய்ப்பை வழங்கியது.

ஆனால் அதை  அடைந்து கொள்வதற்கு பதிலாக, 2010க்குப் பிந்திய அன்றைய அரசுகள் இனவெறிக் கொள்கைகளை தழுவிக் கொண்டன. இதன் விளைவு அழுத்கம, அம்பாறை, காலி, தினக உட்பட பல இடங்களில் முஸ்லிம்கள் இனரீதியாகக் குறி வைக்கப்பட்டனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பலவீனம் அடைந்தது.

அதன் தொடராக அன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 ஏப்ரல்12 அன்று வெளிநாட்டு கடனான 51 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தும் நிலையில் நாடு இல்லை என்று உலகுக்கு அறிவித்தார். மேலும் 2022 ஏப்ரல் 13 அன்று இலங்கையின் புத்தாண்டு விடியற் காலையில் நாடு திவாலாகிவிட்டதாகவும் அவர் அறிவித்தார்.

பொருளாதார ரீதியாகவும் புவிசார் அரசியல் ரீதியாகவும் நாடு மிகவும் பலவீனமான நிலையில் இருந்ததால், ஆட்சியாளர்கள் இந்தியா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு கிட்டத்தட்ட நிபந்தனையின்றி நாட்டின் கதவுகளைத் திறந்து விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் இஸ்ரேலுடனும், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மீதான விரோதப் போக்குக்கு பெயர்போன, இந்தியாவில் ஏற்கனவே மூன்று தடவைகள் தடை செய்யப்பட்ட ராஷ்டிரிய சேவா சங்கம்-ஆர். எஸ். எஸ்-முன்னணி ஆதரவுடனான பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசாங்கத்துடனும், ராஜபக்ஷ அரசாங்கத்தின் வளர்ந்து வந்த உறவுகளும்,  முஸ்லிம்களுக்கு சம அளவிலான அச்சத்தை  ஏற்படுத்தின.

குஜராத்தின் முதலமைச்சராக மோடி இருந்தபோது, குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான படுகொலைகளைத் தூண்டியதாக, மோடி மீது பல்வேறு தரப்பினரால் பரவலாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  அங்கு இடம்பெற்ற கலவரங்களில் 2000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். மேலும் முஸ்லீம்களுக்கு சொந்தமான பில்லியன் கணக்கான சொத்துக்களுக்கு சேதமும் ஏற்படுத்தப்பட்டது..

இந்தியாவுடனும் இஸ்ரேலுடனும் இலங்கையின் உறவுகள் தொடர்ந்து சூடாக இருந்த நிலையில், அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சிங்கள தீவிரவாதக் குழுக்கள் அமைதியான முறையில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடத் தொடங்கின.

இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  இவற்றின் விளைவுகள் 2019 ஏப்ரல் 21 ஆம் தேதி, உயிர்த்த ஞாயிறன்று முஸ்லீம் பெயர்களுடன் எட்டு பேர் நடத்திய தாக்குதல்கள் மூலம் உச்சக்கட்டத்தை எட்டியதாக பரவலாக நம்பப்படுகின்றது.

2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இடம்பெற்ற முஸ்லீம் எதிர்ப்பு வன்முறைகள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களோடு சம்பந்தப்பட்ட எவருக்கும் எதிராக, நாட்டின் எந்தப் பகுதியிலும் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவோ அல்லது முறையான விசாரணைகள் நடத்தப்படவோ இல்லை என்பது முஸ்லிம்களை மேலும் ஏமாற்றம் அடைய வைத்தது.

இதற்கிடையில் இஸ்ரேலியர்கள் நாட்டுக்குள் தீவிரமாக ஊடுருவத் தொடங்கி விட்டனர். காசாவில் இஸ்ரேலின் இனப்படுகொலை குறித்து உள்ளூர் ஊடகங்கள் முக்கியத்துவம் குறைந்த வகையில் மோசமாக செய்திகளை வெளியிட்டன.  பலஸ்தீனர்கள் மீது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் இனப் படுகொலையை மூடிமறைக்க இஸ்ரேலியர்கள் அரசுக்குள்ளும், உள்ளூர் ஊடகங்களின் சில பிரிவுகளிலும், வெற்றிகரமாக ஊடுருவியுள்ளனர் என்பதை இது தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

முஸ்லிம்களுக்கு மிகவும் விரோதமான மற்றும் வட இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பொறுப்பான, பாஜக ஆட்சி செய்யும் இந்தியாவுடன், நமது தீவின் வளர்ந்து வரும் உறவுகளும் இலங்கை முஸ்லிம்களுக்கு சமமான அச்சுறுத்தலாக உள்ளன.  இலங்கை மீதான இந்தியாவின் விரிவாக்க திட்டம் 1947ஆம் ஆண்டு பிரிவினைக்குப் பின்னர் பொது அறிவாக இருந்து வரும் ஒரு விடயமாகும்.

இந்தியாவைப் பொருத்தளவில் இலங்கை முக்கியமான புவிசார் அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்று இந்திய அரசியல்வாதியும் இராஜதந்திரியுமான K.M. பணிக்கர் ஒருமுறை கூறி உள்ளார். இந்தியா மற்றும் இந்தியப் பெருங்கடல் உட்பட்ட பகுதிகள் அடிப்படையில் இந்திய மூலோபாய செல்வாக்கின் கீழ் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், இந்தியாவின் பாதுகாப்பு இலங்கை தீவிலிருந்து பிரிக்க முடியாதது என்றும் பணிக்கர் 1945 ல் எழுதிய தனது ஆக்கங்களில் வாதிட்டுள்ளார்.

இவ்வாறு தான் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் இந்தியா என்பன இலங்கை குறித்து தங்களுக்கே உரித்தான சொந்த நிகழ்ச்சி நிரல்களையும் கொண்டுள்ளன.

அவர்களின் இந்த நிலைப்பாடுகள், நாட்டுக்குள் வேரூன்றி வரும் அவர்களின் இருப்பு மற்றும் செல்வாக்கு என்பன போர்த்துக்கல், டச்சு மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிகளிடமிருந்து நான்கரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு வென்றெடுக்கப்பட்ட இலங்கை தீவின் அரசியல் சுதந்திரத்தில் பெரும் சரிவை ஏற்படுத்துகின்றது.

சர்வதேச மன்னிப்புச் சபை “இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு இந்தியா ஆயுதங்களை வழங்குகின்றது” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ​ தனது அண்மைக்கால அறிக்கையில்,  காசாவில் பலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்ய இந்தியா 2596 கப்பல் பொதிகள் மூலம் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு வழங்கி உள்ளது என்று கூறியுள்ளது.

இது இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே வளர்ந்து வரும் நெருக்கமான உறவுகளையும், அவர்களின் உளவு வலையமைப்புகளான மொசாட் மற்றும் ரோ ஆகியவற்றின் உறவின் வலிமையையும், இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான போக்கில் அவர்களின் கூட்டணியையும், தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

காசாவில் பலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலை, லெபனான் மற்றும் சிரியா மீதான தாக்குதல்கள் காரணமாக உலகின் பல நாடுகள் இஸ்ரேலிலிருந்து தங்களை அந்நியமாக்கிக் கொள்ளும் இன்றைய காலகட்டத்தில், அதற்கு மாறாக  இஸ்ரேலுடனும் இந்தியாவுடனும் இலங்கையின் உறவுகள் வளர்ந்து வகின்றன.

இதற்கிடையில் மக்கள் 2024 நவம்பரில் ஜே. வி. பி. யின் புதிய பதிப்பான தேசிய மக்கள் சக்தி -என். பி. பி- ஆட்சி அமைக்க மூன்றில் இரண்டு  நாடாளுமன்ற பெரும்பான்மையுடன் வாக்களித்தனர். 225 நாடாளுமன்ற ஆசனங்களில் 159 இடங்களை என்.பி.பி யினர் வென்றனர். தற்போதைய ஆட்சியாளர்கள் ஜே. ஆரின் 4/5 பெரும்பான்மையை நினைவில் கொள்வது நல்லது.

இதன் மூலம் உருவான நிறைவேற்று ஜனாதிபதி முறையிலான சர்வாதிகாரம், கொடூரமான PTA சட்டம், மற்றும் இலங்கையின் திவால் நிலைக்கு வழிவகுத்த பொருளாதாரக் கொள்கைகள் என்பன இங்கே நினைவூட்டப்பட வேண்டியவை. ஆட்சியாளர்கள் தங்களைத் தாங்களே ஒரு கேள்வி கேட்க வேண்டும்.

இந்த நாடு பொருளாதார திவால் நிலை என்ற தண்டனயை பெற்றுக் கொள்ள வழிவகுத்த கொள்கைகளிலும், ஜே. ஆரின் அதே சர்வாதிகார பாதையிலும் தான் நாமும் பயணிக்கின்றோமா?? என்பது தான் அந்த கேள்வி.

மாற்றத்தை விரும்பும் பெரும்பாலான முஸ்லிம்களும் தங்கள் குறைகள் தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையில் தான் என். பி. பி. க்கு வாக்களித்தனர். எவ்வாறாயினும், 1948 சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, ஒரு முஸ்லீம் இல்லாமல் தனது புதிய அமைச்சரவையை என். பி. பி அரசாங்கம் அறிவித்த போது இந்த அரசாங்கத்தின் மீது முஸ்லிம்களுக்கு முதலாவது அதிர்ச்சி ஏற்பட்டது.

மேலும், நாடாளுமன்ற சபாநாயகர் ராஜினாமா செய்தபோது, துணை சபாநாயகராக இருக்கும்  ஒரு முஸ்லீம், இந்த இடத்துக்கு நியமிக்கப்படுவார் என்று முஸ்லிம்கள் எதிர்பார்த்தனர். இருப்பினும் முறைப்படி இடம்பெற வேண்டிய அந்த நியமனமும் இடம் பெறவில்லை. ஒருவேளை அவர் ஒரு முஸ்லீம் என்பதால் தான் அந்த நியமனம் நடக்கவில்லையா? என்ற க​வலையும் முஸ்லிம்களை ஆட்கொண்டது.

பெரும்பாலான அரசாங்க குழுக்கள், சபைகள் மற்றும் ஆணைக் குழுக்களிலும் முஸ்லிம்கள் காணப்படவில்லை. இந்த அலட்சியம் ஏமாற்றமடைந்த முஸ்லிம்களிடையே விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது. இந்த வரிசையில் கடைசியாக முஸ்லீம் உறுப்பினர்கள் இல்லாத புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவும் வந்து விட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...

48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

ரயில்வே திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 17 மற்றும் 18...

பாடசாலையில் 2 மாணவர்களைச் சேர்க்க ரூ. 2.5 லட்சம் இலஞ்சம்: உனவட்டுன பாடசாலை அதிபர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது!

காலி - உனவட்டுன, ருமஸ்ஸல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின்...

உலக எழுத்தறிவு தினம் இன்று: உலகளவில் எழுத்தறிவு 88%ஐ எட்டியது; இன்னும் படிப்பறிவு இல்லாத 739 மில்லியன் மக்கள்.

சர்வதேச எழுத்தறிவு தினம் அறிவிக்கப்பட்டு ஆறு தசாப்தங்கள் (60 ஆண்டுகள்) நிறைவடைந்துள்ள...