சவூதி-துருக்கி-பாகிஸ்தான் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் : அமெரிக்காவின் முஸ்லிம் நேட்டோவா அல்லது வெறும் காகித புலியா?

Date:

-லத்தீப் பரூக்

சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான், ஆகிய நாடுகள்,  2026 ஆகஸ்ட் 7ம் திகதியன்று, புதிய பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த மூன்று நாடுகளில் ஏதாவது ஒன்றுக்கு, எதாவதொரு வகையில் இராணுவ அச்சுறுத்தல் ஏற்படுகின்ற போது, ஒருவருக்கொருவர் உதவுவிக் கரம் நீட்டும் நோக்கில் “மக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்” என்ற பெயரில் இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

துருக்கி ஜனாதிபதி தயிப் எர்டோகன், சவூதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோர், முதல் முறையாக உலகின் மூன்று பெரிய முஸ்லீம் நாடுகளையும் ஒரே பாதுகாப்பு குடையின் கீழ் இணைக்கும் இந்த வரலாற்று ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

எகிப்தும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று துருக்கி வலியுறுத்திய போதிலும், அதை சவூதி அரேபியா விரும்பவில்லை என்பதால், எகிப்து இதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் எதிரியாக பிரமாணம் செய்து கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்த ஒப்பந்தத்தை உடனடியாக வரவேற்றுள்ளார்.  “மூன்று நாடுகளும் இறுதியாக இதில் கையெழுத்திட்டுள்ளன”. இதனால் தான் “மிகவும் மகிழ்ச்சியடைவதாக” ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த மூன்று நாடுகளில் ஏதாவது ஒன்றுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல்கள் இடம்பெற்றால், அது இயல்பாகவே ஏனைய இரு நாடுகளையும் தாக்கியதாகக் கருதப்படும். இந்த ஒப்பந்தம் முற்றாகத் தற்காப்பு இயல்புடையது என்றும், எந்தவொரு குறிப்பிட்ட நாட்டுக்கும் எதிரானது அல்ல என்றும் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது.

சவூதி அரேபியா இஸ்லாத்தின் பூமி. மேலும் உலகெங்கிலும் உள்ள இரண்டு பில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் சமய வழிகாட்டலுக்காகவும், வழிபாட்டுக்காகவும், உத்வேகத்துக்காகவும் இந்த நாட்டையே அணுகுகின்றனர் மற்றும் நோக்கி நிற்கின்றனர்.

இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில், முதலாவது உலகப் போரின் போது துருக்கியின், உதுமானிய பேரரசு வீழ்த்தப்பட்ட பின்னர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாத சக்தியால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்ட தற்கால சவூதி ஆட்சி, கடந்த பல தசாப்தங்களாக  அதன் சுய இருப்புக்கு அமெரிக்காவையே நம்பி நிற்கின்றது.

அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல், சவூதி அரசு இரண்டு வாரங்கள் கூட ஆட்சியில் தாக்கு பிடிக்க முடியாது என்று டிரம்ப் ஒருமுறை பகிரங்கமாகவே கூறி உள்ளார்.

பிற்காலத்தில் இஸ்ரேலின் பிரதமராகப் பதவி வகித்த,சியோனிச யூத பயங்கரவாதி மெனாச்சம் பெகின், சவூதி அரேபியா தனது வாஷிங்டன் நோக்கி பயணிக்கும் பாதையில், இஸ்ரேலுடன் இணங்கிச் சென்று சமரசம் செய்து கொள்வது தவிர்க்க முடியாதது என்றும் கூறி இருந்தார்.


ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்கொண்டுள்ள சட்ட விரோத யுத்தத்தில், ஈரான் மீது தாக்குதல்களை நடத்த தனது நாட்டிலுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை அனுமதித்தமைக்காக, சவூதி அரேபியா, ஈரானின் கடுமையான சீற்றத்துக்கும் தாக்குதல்களுக்கும் ஆளாகி உள்ளது.

இந்நிலையில் ஈரானிய ஏவுகணைகள் மற்றும் குண்டு வெடிப்புகளிலிருந்து தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள முடியாத சவூதிக்கு, அமெரிக்காவும் தன்னை மோசமாகக் கைவிட்டுள்ள பின்னணியில், பாதுகாப்புக்கான சில வழிகள் அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படுகின்றன.

மாறிவரும் இன்றைய சூழ்நிலைகள் பற்றி கருத்து தெரிவிக்கையில்,  “சவுதி வெளியுறவு அமைச்சர் பைசல் பின் பர்ஹான் ” அமெரிக்காவை​ நம்பியிருக்கும் சகாப்தம் முடிந்துவிட்டது”.

ட்ரம்ப் தனது சொந்த நாட்டைக் கூட பாதுகாக்க முடியாதபோது, எப்படி எம்மைப் பாதுகாக்க முடியும்?  சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை, உடனடி நோக்கம் மேலதிக பாதுகாப்பு மூலோபாய சுதந்திரமாகும்.

ரியாத் கடந்த பல தசாப்தங்களாக தனது தீர்க்கமான பாதுகாப்புக்கு வாஷிங்டனிலேயே தங்கி இருந்தது. அந்த உறவு ஒருபோதும் மறைந்து விடாது.

சவூதி அரேபியாவை பொருத்த மட்டில் ஒரு பக்கம் சார்ந்திருக்க வேண்டும் என்பதற்காக இன்னொரு தரப்புடன் பரிமாற்றம் செய்து கொள்ளத் தேவை இல்லை என்பதற்கான எந்த காரணமும் இல்லை.

தனக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைத்துக் கொள்ளும் உத்தரவாதத்திற்காக ஒரு தனி சக்தியிடம் இனிமேலும் தங்கியிருக்க முடியாது” என்பதே எமது நிலைப்பாடாகும், என சவூதி வெளியுறவு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த வகையில் பாகிஸ்தானின் இராணுவ வல்லமை மற்றும் அணுசக்தி திறன் என்பன இந்தக் கூட்டணிக்கு தேவைப்படும் மூலோபாய காப்பீட்டிற்கான ஒரு ஆதாரமாகக் கருதப்படுகின்றன. அதே நேரத்தில் துருக்கியின் இராணுவ வலிமை மற்றும் துரிதமாக விரிவடைந்து வரும் அதன் ஆயுதத் தொழில் என்பன மற்றொரு ஆதாரத்தை வழங்குகின்றது.

இஸ்ரேலுடனான துருக்கியின் சுமார் ஏழு பில்லியன் டொலர் வர்த்தக உறவுகள் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளன. காசாவில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இடைவிடாத இனப்படுகொலை விடயத்தில் இரண்டு ஆண்டுகளாக துருக்கி கண்மூடித்தனமான ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்துள்ளது.

ஆகஸ்ட் 2025 க்குப் பிறகு தான் அதன் வான்வெளி மூடப்பட்டது மற்றும் ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டது. எவ்வாறாயினும், மூன்றாம் தரப்பின் இடைத்தங்கல் போக்குவரத்து ஏற்றுமதிகள்-துருக்கியின் செஹான் துறைமுகம் வழியாக இடம் பெறுகின்றன.

உதாரணத்துக்கு அஸர்பைஜானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி போன்றவை. உத்தியோகபூர்வ அரசு கட்டுப்பாடுகள் இருந்த போதிலும், பிராந்திய விநியோக வழிகள் என்ற போர்வையில் இவை தொடருகின்றன.

பாகிஸ்தானில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் இம்ரான் கானின் மக்கள் அரசாங்கத்தை நசுக்கிய பின்னர், அமெரிக்க ஆதரவோடு அதிகாரத்தில் அமர்த்தப்பட்ட, பாகிஸ்தானின் இராணுவ சார்பு ஆட்சியைப் பொறுத்த மட்டில், அதன் விசுவாசம் தொடர்ந்தும் அமெரிக்காவுக்கு சார்பாகவே உள்ளது.

இராணுவத்தால் அதிகாரத்தில் அமர்த்தப்பட்ட அமெரிக்க அடிமையான, பிரதம மந்திரி ஷாபாஸ் ஷெரிப், தனது வெட்கக் கேடான நிலைப் பாட்டை நிரூபிக்கும் வகையில், பலஸ்தீனர்களை கொல்ல இஸ்ரேலுக்கு தாராளமாக உதவி வரும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காகவும் சிபார்சு செய்துள்ளார்.

அமெரிக்காவின் மத்திய கிழக்கு பிராந்திய பாதுகாப்பு நலன்களுக்கு சேவை செய்வதற்காக, “மத்திய கிழக்கின்”, “அரபு” அல்லது “முஸ்லீம்” நேட்டோ ஒன்றை உருவாக்கும் அமெரிக்காவின் நீண்டகால கனவு, மக்கா பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற போர்வையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று கட்டுரையாளர் ஜோசப் மசாத் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மக்கா ஒப்பந்தம் என்பது, பனிப்போர் யுகத்தின் தொடக்கத்திலிருந்தே, தற்போதுள்ள மேற்கத்திய சார்பு ஆட்சிகளையும், அவர்களின் அமெரிக்க ஆதரவாளர்களையும், அவர்களின் வெளிகாட்டிக் கொள்ளப்படாத நட்பு நாடான இஸ்ரேலையும், பாதுகாப்பதற்கான அமெரிக்க கொள்கையின் அண்மைக்கால மீள் பதிப்பு மட்டுமே.

ஆச்சரியப்படத்தக்க வகையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிரிகள்தான் அதன் உண்மையான இலக்குகள், .

இந்தப் புதிய ஒப்பந்தம் பாக்தாத் ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் 1955 இல், அமெரிக்க ஆதரவுடன் செய்து கொள்ளப்பட்ட மத்திய ஒப்பந்த அமைப்பின் மாதிரியைப் பின்பற்றியே உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே சவூதி அரேபியா இந்த ஒப்பந்தத்தை ஈரானுக்கு எதிரான காப்பீடாக ஓரளவு பார்க்க இடமுண்டு.

இருந்தாலும் துருக்கியும் பாகிஸ்தானும், ஈரானுக்கு எதிரான, சவூதியின் யுத்தம் ஒன்றுக்கு ஆதரவாக, கையெழுத்திட்டுள்ள ஆவணம் என்று இதை அர்த்தம் கொள்ளவும் முடியாது. என்னதான் மூடி மறைத்தாலும் இந்த ஒப்பந்தத்தின் இலக்கு மிகவும் வெளிப்படையாகவும் துல்லியமாகவும் தெரிகின்றது.

இருப்பினும் ஒப்பந்தத்தின் மூன்று உறுப்பு நாடுகளில், இரண்டு நாடுகள் குறிப்பிட்ட அந்த இலக்கு வைக்கப்பட்டுள்ள நாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. மோதல் நிலை ஒன்று உருவாகும் பட்சத்தில் அதை நிராகரிக்க பாகிஸ்தானுக்கு இன்னும் வலுவான காரணங்களும் உள்ளன.

ஈரானுடனான அதன் நீண்ட எல்லை, தற்போது கொந்தளிப்பு நிலையில் உள்ள முக்கியமான பலுசிஸ்தான் பிராந்தியத்தின் வழியாகவே அமைந்துள்ளது.

எனவே ஈரானுடன் மோதுவது அந்த எல்லையை எளிதில் கடந்து பாகிஸ்தானின் சொந்த பிரிவினைவாத சவால்களை மேலும் மோசமாக்கக் கூடும் என்பதை பாகிஸ்தான் நன்கு தெரிந்து வைத்துள்ளது.இந்த ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் மூன்று நாடுகளும் தங்கள் பாதுகாப்பு விடயத்தில் ஒருவருக்கொருவர் பிணைப்பை தெரிவு செய்ததில் மட்டும் அமைந்து விடவில்லை.

இந்த முடிவு வெளி வந்துள்ள வரலாற்று தருணம் தான் இங்கு மிகவும் அவதானத்துக்கு உரியதாகும். ஏனெனில் மத்திய கிழக்குப் பிராந்தியம் என்பது பல தசாப்தங்களாக அமெரிக்காவாலும் ஐரோப்பாவாலும் யுத்தம், உள்நாட்டு தலையீடுகள், மறைமுக மோதல்கள் மற்றும் வெளிப்படையாக  நிர்வகிக்கப்படும் பாதுகாப்பு கட்டமைப்புகளின் அரங்கமாகவே திகழ்ந்து வருகின்றது.

இஸ்ரேலின் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பு, பிராந்திய ரீதியான அதன் இராணுவ நிலைப்பாடு என்பன குறித்து சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தானும் கவலை கொண்டுள்ளன என்று ராய்ட்டர்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 2023 முதல், பலஸ்தீன மக்கள் மீதான இனப் படுகொலையையும், காசா மீதான அழிவையும் இஸ்ரேல் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றது. தெற்கு லெபனான் மீது படையெடுப்பு, மேலும் சிரியாவின் நிலப்பரப்பு ஒன்றை கைப்பற்றியமை மற்றும் ஈரானுக்கு எதிராக பெரிய தாக்குதல்களை நடத்திமை என்பனவும் இதில் அடங்கும்.

இந்த மூன்று தரப்பும் இஸ்ரேலுக்கு எதிரான இராணுவக் கூட்டணி ஒன்றை உருவாக்கவில்லை,. ஆனால் அவர்களின் ஒருங்கிணைப்பு, இஸ்ரேல் தனது எதிரிகளை தனித்தனியாக எதிர்கொள்ள, பல தசாப்தங்களாக தனது எதிரிகள் மத்தியில் ஏற்படுத்தி வந்த பிளவுகளை, சீர்குலைக்கின்றது.

இஸ்ரேல் பிராந்தியத்தில் ஒரு நாட்டை தாக்கும் போது, சுற்றியுள்ள சில அரபு நாடுகளுடன் இயல்பு நிலையை ஏற்படுத்தும். மேலும் அதை கட்டுப்படுத்தக் கூடிய எந்தவொரு பிராந்திய சமநிலையையும் தடுக்க, அது வாஷிங்டனை சார்ந்து நிற்கும்.​ இதுவே இஸ்ரேலின் பிரதான மூலோபாயம்

இந்நிலையில் மக்கா ஒப்பந்தம் சாத்தியமாகுமா என்பதற்கான தீர்க்கமான சோதனையாக பலஸ்தீனம் மாறக்கூடும். 19ஆம் நூற்றாண்டில் ஜமால் அல்-தின் அல்-அஃப்கானி போன்ற புத்தி ஜீவிகளால் பரிந்துரைக்கப்பட்ட, இஸ்லாமிய ஒற்றுமை மற்றும் கூட்டு பாதுகாப்பின் இத்தகைய கட்டமைப்பு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தேடப்பட்டு வரும் ஒன்றாகும்.

இருப்பினும் எல்லா நிலைகளிலும்   இதன் யதார்த்தம் என்பது உண்மையில் வேதனையுடன் பின்தங்கிய ஒன்றாகவே உள்ளது.

காசா அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலும், பாகிஸ்தான் ஏற்கனவே அணு ஆயுதங்களைக் கொண்டிருந்தது. துருக்கி ஏற்கனவே நேட்டோ அமைப்பின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றைக் கொண்டிருந்தது.

சவூதி அரேபியா ஏற்கனவே மகத்தான நிதி, இராஜதந்திர செல்வாக்கு உட்பட இன்னும் பல ஆற்றல் திறன்களைக் கொண்டிருந்தது. இந்த திறன்கள் எதுவும் காஸாவில் இடம்பெற்ற இனப் படுகொலைகளைத் தடுக்கவில்லை. இது ஜீரணிக்க முடியாத ஒரு உண்மையாகும்.

பலஸ்தீனர்கள் தொடர்ந்தும் வெளியேற்றப்பட்டும், கொல்லப்பட்டும் வருகின்ற நிலையில், மக்கா ஒப்பந்தம் இறுதியில் வெறுமனே ஆட்சிகள்,  ஆள்புல எல்லைகள், எண்ணெய் வளங்கள் மற்றும் கப்பல் பாதைகளைப் பாதுகாப்பதை மட்டுமே குறிக்கின்றது என்றால், அந்த ஒப்பந்தம் ஏற்கனவே அதற்கான சோதனையில் தோல்வி அடைந்து விட்டது என்பதே யதார்த்தமாகும்.

பலஸ்தீனர்களைப் பொறுத்தவரை, அமெரிக்கா தலைமையிலான, ஈரானிய எதிர்ப்பு எல்லையை, ஈரானுக்கு எதிரான “சுன்னி” கூட்டணியோடு இணைப்பது, அல்லது ஈரானிய அல்லது துருக்கிய மேற் பார்வையின் கீழ், அமெரிக்க மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது என்பது மிகக் குறைந்த அளவிலேயே சாத்தியமாகக் கூடியது.

அரபு, துருக்கி, பாரசீக மற்றும் தெற்காசிய நலன்களை பேணி அவர்களின் வேறுபாடுகளை வெளிப்புற சக்திகளும், சியோனிச ஆட்சியும் சுரண்ட அனுமதிக்காத வகையிலான திறன் கொண்ட, ஒரு உள்நாட்டு பிராந்திய அதிகார சமநிலையே பலஸ்தீன மக்களின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது..

முஸ்லீம் உலகில் ஒற்றுமையின் எதிர்பார்ப்பு மற்றும் வாஷிங்டனில் இருந்து விடுபட்ட சுயாதீனமான ஒரு பாதுகாப்பு கூட்டணி என்பது கடந்த நூற்றாண்டின் பெரும்பாலான காலப் பகுதிகளில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒன்றாக இருந்த போதிலும், மக்கா ஒப்பந்தம் இந்த இரண்டையும் வெளிப்படுத்தி உள்ளது.

இந்த உடன்படிக்கைக்கு ஈரானின் பதில், துரிதமாகவும் விமர்சன ரீதியாகவும் உள்ளது. ஈரானின் நாடாளுமன்ற தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் உறுப்பினரான இப்ராஹிம் ரெஸாய், இந்த ஏற்பாட்டை நிராகரித்துள்ளார்.

“பல ஆண்டுகளாக அமெரிக்கர்கள் ஒரு தலைப்பட்சமாக பாலூட்டி வந்தமை, சவூதி அரேபியாவுக்கு தேவையான பாதுகாப்பைக் கொண்டு வரவில்லை.

அது போலவே, துருக்கி மற்றும் பாகிஸ்தானுடனான ஒரு காகித ஒப்பந்தமும் அவர்களுக்கு பாதுகாப்பைக் கொண்டு வராது என்பதை சவுதி மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த பதில் பாகிஸ்தானை அடிப்படையில் தர்மசங்கடமான ஒரு நிலைக்குத் தள்ளி உள்ளது. வளைகுடா பாதுகாப்பு கட்டமைப்பில் ஆழமாக ஈடுபடுவது, தெஹ்ரானுடனான பாகிஸ்தானின் நுட்பமான, பாரம்பரியமான, எச்சரிக்கையான, உறவுகளை சீர் குலைக்கும் ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பாகிஸ்தான் தனது சொந்த தேசிய நலன்களுக்கு எந்த வகையிலும் உதவாத, வெளிநாட்டு மோதல்களுக்குள் இழுக்கப்படும் அபாயகரமான “சிக்கல்” நிலை குறித்து ஆய்வாளர்களும் எச்சரித்துள்ளனர்.

இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்குக்கு அப்பாலும் தாக்கங்களைக் கொண்டுள்ளது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை, சவுதி அரேபியா மற்றும் துருக்கியுடன் நெருக்கமான உறவுகள் என்பது அதன் பரம எதிரியான இந்தியாவுக்கு ஒரு மூலோபாய எதிர் தாக்கத்தை வழங்கக் கூடும்.

சவூதி அரேபியா புது தில்லியுடன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளைப் பேணி வந்தாலும் கூட, கூட்டு பாதுகாப்புக் கட்டமைப்பு என்பது முக்கிய வளைகுடா சக்திகளின் பாதுகாப்பு பங்காளியாக பாகிஸ்தானின் பங்கை மேலும் வலுப்படுத்துகின்றது.

இந்தியாவின் புகழ் பூத்த முன்னாள் வெளியுறவுச் செயலாளரும் இராஜதந்திரியுமான நாவெல் சிபால் இந்த ஒப்பந்தத்தை “இந்திய நலன்களுக்கு மிகவும் எதிர்மறையான வளர்ச்சி” என்று விவரித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல், கிரேக்கம், சைப்ரஸ் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா தனது மூலோபாய விருப்பங்களை விரிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட...

ஷானி மற்றும் ரவியின் அடிப்படை உரிமைகளை தேசபந்து மீறியுள்ளதாக தீர்ப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவர் அடிப்படை...

பிலிப்பைன்ஸ்: தசாப்தகால போராட்டத்திற்குப் பின் முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நாடாளுமன்றத் தேர்தல்!

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள பாங்சாமோரோ தன்னாட்சிப் பிராந்தியத்தில் (BARMM) வரலாற்றுச் சிறப்புமிக்க...

தங்கம் வென்ற ருமேஷ் தாயகம் வருகை

உலக தடகள அல்டிமேட் செம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம்...