நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய, மேல், தென், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நீர்கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையிலான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இதனால், குறித்த கடல் பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரையிலான பலத்த காற்று வீசக்கூடும். இதன்போது கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
