கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது குறித்த கோரிக்கைகள் தொடர்பில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரிய நேரத்தில் தகுந்த முடிவை எடுப்பார் என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், இந்த விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடையது என்றும், நீதித்துறை ஏற்கனவே தனது தீர்ப்பை வழங்கிவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், இதுகுறித்த மேலதிக நடவடிக்கைகள் எவையும் நீதிமன்றத்தின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, ஜனாதிபதி எப்போதும் சிறந்த தீர்ப்புகளையும் முடிவுகளையும் வழங்குவார் என்பதில் தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அவர் எப்போதும் நீதித்துறை, நாட்டின் கலாச்சாரம் மற்றும் அரசியலமைப்பிற்கு மதிப்பளித்துச் செயல்படுபவர் எனவும் குறிப்பிட்டார்.
புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தேசிய கல்வி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பை வழங்குவதற்காக, கண்டியில் உள்ள மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா விஹாரைகளுக்கு நேற்று (15) விஜயம் செய்து மகாநாயக்க மற்றும் அநுநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னரே பிரதமர் ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
கண்டியில் பௌத்த பிக்குகளால் தொடங்கப்பட்ட பேரணியானது, ஆரம்பத்தில் ஞானசார தேரர் சிறை உடை அணிய வேண்டும் என்ற கட்டளைக்கு எதிராகத் தொடங்கப்பட்டு, தற்போது ஜனாதிபதி பொதுமன்னிப்பு கோரும் கோரிக்கையாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
