இலங்கை – துருக்கியே இடையே விமானப் போக்குவரத்து உடன்படிக்கை திருத்தம்: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த புதிய நடவடிக்கை!
இலங்கைக்கும் துருக்கியேவுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து உடன்படிக்கையைத் திருத்துவதற்கான நெறிமுறையில் இரு நாடுகளின் பிரதி அமைச்சர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
துருக்கியின் அங்காராவில் நேற்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) இந்தத் திருத்தப்பட்ட உடன்படிக்கை உத்தியோகபூர்வமாக கையெழுத்தானது.
இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர மற்றும் துருக்கியின் போக்குவரத்து மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் என்வர் இஸ்குர்ட் (Enver İskurt) ஆகியோர் இதில் கைச்சாத்திட்டனர்.
பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர திங்கட்கிழமை (26) முதல் இன்று புதன்கிழமை (28) வரை துருக்கியேவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, துருக்கியின் வெளிவிவகார பிரதி அமைச்சர் பெர்ரிஸ் எகின்சி (Berris Ekinci) உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குப் பொறுப்பான பிரதி அமைச்சர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து அவர் முக்கிய கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
இந்த நெறிமுறை கைச்சாத்திடப்பட்டமையானது இலங்கைக்கும் துருக்கியேவுக்கும் இடையிலான சிவில் விமானப் போக்குவரத்து ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாகும் என பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாத்துறை, வர்த்தகம், முதலீடு மற்றும் மக்களுக்கிடையிலான கலாச்சார பரிமாற்றங்கள் ஆகியவற்றில் புதிய கதவுகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் துருக்கியே அரசாங்கம் வழங்கிய அர்ப்பணிப்புமிக்க ஒத்துழைப்புக்கு பிரதி அமைச்சர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.