Wednesday, October 28, 2026

1990இல் திக்குத்திசை தெரியாமல் தவித்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய புத்தளம் மக்கள்

2 min read · 23 reads
ஆக்கம்; இசட்.ஏ. சன்ஹிர்.
கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு திசையிலிருந்து அகதிகளாகத் துரத்தப்பட்டுத் தஞ்சம் கோரிவந்த இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்களுக்குத் தன் வீடுகளையும், பள்ளிவாசல்களையும், நிலங்களையும் வாரி வழங்கி அரவணைத்தது புத்தளம் சமூகம்!
அகதிகளாய் வந்த உறவுகளைதாங்கிப் பிடித்து, இன்றுவரை எந்தவிதப் பெரிய முரண்பாடுகளுமின்றி ஒன்றரை இலட்சம் மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்துவரும் புத்தளத்தின் உன்னத மனிதநேயத்தையும், 36 ஆண்டுகால வரலாற்றுப் பிணைப்பையும் விளக்கும் ஒரு சிறப்புப் பார்வை.

எத்தளம் போனாலும் புத்தளம் போகாதே – யார் சொன்னது?

நேசக்கரம் நீட்டி 36 வருடங்களாகின்றன. அந்த நினைவுகள் பசுமரத்தாணியாய்ப் பதிந்துள்ளன.
பாத்திமாக் கல்லூரியின் மேல் மாடியில் நின்று, மாலைவேளை பொருளியல் பாடமெடுத்துக்கொண்டிருந்தபோது புத்தளம் நகரை நோக்கி வடபுலத்திலிருந்து லொரிகள் அணிவகுத்து வருகின்றன.
கொட்டும் மழைக்கும் மத்தியில் நகர வீதிகளில் பிள்ளைகுட்டிகளுடன் செய்வதறியாது கண்ணீரும் கம்பலையுமாக தவித்து நின்ற குடும்பங்கள்.
வார இறுதியில் கல்பிட்டி அல் அக்ஸாவுக்கு வகுப்பெடுக்கச் சென்றால், வள்ளம் மூலம் வந்தவர்களால் பாடசாலை நிரம்பிவழிகின்றது. வகுப்பறைகளில் தொட்டில்கள்.
வீடுகள், பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், தென்னங்காணிகள், வெற்று நிலங்கள் என, அரச அனுசரணை கிட்டும்வரை அனைத்தையும் பகிர்ந்து அரவணைத்த சமூகம்; புத்தளம் சமூகம்.
‘முஹாஜிரீன்கள் – அன்ஸாரீன்கள்’ சம்பவம் புத்தளத்திலும் நடந்தேறியதாக ஜும்ஆக்களில் கூறப்பட்டது. தற்போதும் நினைவூட்டப்படுகின்றது.
அந்த உறவு 36 வருடங்களாக இன்றும் நட்புடன் தொடர்கிறது. புத்தளம் பிரதேசத்துக்குள் ஒரேயடியாக 75,000 பேர் வந்துசேர்ந்து, ஒன்றரை இலட்சங்களாகப் பல்கிப் பெருகி, 36 வருடங்கள் பாரியளவிலான முரண்பாடுகளின்றி வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை சற்று நினைத்துப்பாருங்கள்.
உபகார சமூகம் (Host community) பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சமூகம் (Forcibly Evicated Society) என்று’ பிரித்தறிய முடியாதவாறு இன்று உறவுகள் வலுப்பெற்றுள்ளன.
‘Gen alpha’ வுக்கு இவை எதுவுமே தெரியாது. அவை இரண்டறக் கலந்து ஒருமித்துப் பயணிக்கின்றது. இது இந்நாட்டுக்கே ஒரு முன்மாதிரி.
திக்குத் திசை தெரியாமல் தவித்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியதற்கு ‘மனிதம்’ ‘சமயம்’ தவிர வேறு காரணங்கள் இருக்கமுடியாது.
பெளதீக வளங்களை மட்டுமன்றி சுற்றுச் சூழலையும் பகிர்ந்ததற்கு, புத்தளம் சமூகம் இதுவரை எவ்வித நட்டஈடும் கோரியதில்லை.
மறுமையில் அதற்கான கூலி நிச்சயம் கிடைக்கும் .