இலங்கையில் நுரையீரல் புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை 50% அதிகரிப்பு!
இலங்கையில் நுரையீரல் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது.
2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிடையேயும் நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் சுமார் 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய சுவாச நோயியல் நிறுவனத்தின் மார்பக அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சமன் இத்தாகொட தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெலிசற மார்பு வைத்தியசாலையின் தரவுகள் மற்றும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் புள்ளிவிபரங்களை ஆய்வு செய்ததில், இலங்கையில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரிடையேயும் நுரையீரல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, ஆண்களிடையே அதிகம் பதிவாகும் முக்கிய புற்றுநோய்களில் ஒன்றாகவும், பெண்களிடையே முதல் 10 புற்றுநோய்களுக்குள் ஒன்றாகவும் நுரையீரல் புற்றுநோய் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, புகைப்பிடிக்காதவர்கள் மத்தியிலும், பெண்களிடையேயும் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ, நுரையீரல் புற்றுநோய்க்கான ஆபத்துக் காரணிகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
நுரையீரல் புற்றுநோய்களில் சுமார் 90 சதவீதமானவை புகைப்பிடித்தலுடன் தொடர்புடையவை எனக் குறிப்பிட்ட அவர், புகைப்பிடிக்காதவர்களுக்கும் இந்நோய் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பிறர் புகைக்கும் சிகரெட்டிலிருந்து வெளியாகும் புகையைச் சுவாசித்தல், வெளிப்புற மற்றும் வீட்டுக்குள் காணப்படும் காற்று மாசுபாடு ஆகியவையும் நுரையீரல் புற்றுநோய்க்கான முக்கிய ஆபத்துக் காரணிகளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் புகை வெளிப்புற காற்று மாசுபாட்டுக்குக் காரணமாக அமைகின்றது.
அதேபோன்று, வீடுகளில் விறகு மற்றும் மண்ணெண்ணெய் அடுப்புகளைப் பயன்படுத்தும்போது போதிய காற்றோட்டம் இல்லாதிருப்பதால், புகை வீட்டுக்குள் தேங்கி நிற்பதும் நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நீண்டகால சுவாச நோய்கள், மண் மற்றும் கட்டிடப் பொருட்களில் காணப்படும் ரேடான் கதிர்வீச்சு வாயு, அஸ்பெஸ்டாஸ் மற்றும் சிலிக்கா போன்ற புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய காரணிகளுக்கு உள்ளாவதும் நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.