Tuesday, November 10, 2026

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை : நாளை முதற்கட்ட சோதனை!

2 min read

மின்சாரத்தில் இயங்கும், விமானி இல்லாத பயணிகள் ட்ரோன் சேவையை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கான முதலாவது உத்தியோகபூர்வ சோதனை நாளை (11) கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் (Port City) முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், பயணிகள் ட்ரோன்களை அறிமுகப்படுத்தும் சீனாவின் EHang நிறுவனம், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தது.

அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

eVTOL என அழைக்கப்படும் இந்த வகை ட்ரோன்கள், ஓடுபாதை இன்றி செங்குத்தாக மேலெழுந்து பறக்கவும் தரையிறங்கவும் கூடியவை. சுற்றுலாத்துறை, பயணிகள் போக்குவரத்து மற்றும் அவசரகால சேவைகளுக்காக இவற்றைப் பயன்படுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு, விமானப்படை, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, துறைமுக நகர ஆணைக்குழு, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, முதலீட்டுச் சபை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியுள்ளது.

ஆரம்பத்தில் வணிக ரீதியான சேவையாக அல்லாமல், பரிசோதனைத் திட்டமாகவே இதனை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, சுமார் ஆறு மாத காலப்பகுதியில் துறைமுக நகரப் பகுதியில் பல்வேறு சோதனைகள் நடத்தப்படவுள்ளன.

இரண்டு பயணிகள் பயணிக்கக்கூடிய E216 ரக ட்ரோன் விமானம் அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாளைய சோதனை உள்ளிட்ட பரிசோதனை நடவடிக்கைகளுக்கு இந்த விமானம் பயன்படுத்தப்படவுள்ளது.

16 உந்துவிசிறிகள் (Propellers), 12 மின்கலத் தொகுதிகள், மூன்று விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் கணினி கட்டமைப்பு ஆகியவற்றை இந்த விமானம் கொண்டுள்ளது.

ஒரு மத்திய கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்து தொலைநிலைக் கட்டுப்பாட்டு சாதனம் மூலம் விமானத்தை இயக்க முடியும். விபத்து அல்லது தொடர்பாடல் கோளாறு ஏற்பட்டால், தானியங்கி முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணிகள் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலம், சுற்றுலாத்துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சிகிரியா, பிடுரங்கல மலைப்பகுதிகள் மற்றும் தீவுப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளை வான்வழியாக அழைத்துச் செல்வதன் மூலம், வான்வழிச் சுற்றுலாவுக்கான புதிய சந்தையொன்றை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.