புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலப்பொருள்கள் உள்ளடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்துள்ள வர்த்தகர்களில் அவற்றை மீள ஏற்றுமதி செய்யாதுள்ள இரண்டு நிறுவனங்களுக்கும் அவற்றை உடனடியாக திருப்பி அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம் கேட்டுள்ளது.
இந்த தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த கட்டான ரிபைனரீஸ் நிறுவனம் அது இறக்குமதி செய்த 105 மெற்ரிக் டொன் அப்லொடொக்சின் மூலப்பொருள் அடங்கிய எண்ணெயை மீண்டும் மலேஷியாவுக்கு திருப்பி அனுப்பி உள்ளது.
மற்றொரு நிறுவனமான அலி பிரதர்ஸ் நிறுவனம் 1513 தசம் 7 மெற்ரிக் டொன் எண்ணெயை 04 கொள்கலன்களில் இறக்குமதி செய்துள்ளது. ஏதிரிசிங்க எடிபில் ஒயில் கம்பனி 03 கொள்கலன்களில் 230 மெற்ரிக் டொன் எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது. இவற்றை மீள ஏற்றுமதி செய்யுமாறே மேற்படி நிறுவனங்கள் இரண்டுக்கும் இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த மூன்று நிறுவனங்களும் இறக்குமதி செய்த தேங்காய் எண்ணெயில் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய அப்லொடொக்சின் மூலப் பொருள்கள் இருந்தமை இரண்டாவது ஆய்வு கூட சோதனைகளிலும் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே இவற்றை மீள அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.