இலங்கையில் முஸ்லிம் பெண்கள் மீதான பாரபட்சத்தை இலங்கை அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்ச்சியாக அதிகரிக்கச் செய்துவருவதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்தை மூடும் ஆடை மீதான தடையானது, சமூக ரீதியில் அவர்களை ஓரங்கட்டும் செயற்பாடு என கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிராந்தியத்தின் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி விமர்சித்துள்ளார்.
இலங்கையில் கடந்த மாதம் முஸ்லிம் பெண்கள் அணியும் முகத்தை மூடிய நியாப் மற்றும் புர்ஹா போன்ற ஆடைகளுக்கு தடைவித்திருந்தமை தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து விதிக்கப்பட்ட இதேபோன்ற தற்காலிக தடை காரணமாக, பல முஸ்லீம் பெண்கள் பொதுவெளியில் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகியிருந்தார்கள் எனவும் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் பல்கலைகழகங்கள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்களுக்குள் பிரவேசிப்பதற்கு முகத்தை மூடி ஆடை அணிந்த முஸ்லீம் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பான வழக்குகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆவணப்படுத்தியிருந்ததாகவும் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பிராந்தியத்தின் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த தடையை முன்மொழிந்துள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, முகத்தை மூடும் ஆடையானது மத தீவிரவாத அடையாளம் என கூறியுள்ளதை மீனாட்சி கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் இந்த தடையை நியாயப்படுத்த சரத் வீரசேகர முயற்சிப்பதாக கூறியுள்ள அவர், இது கோட்டாபய அரசாங்கத்தின் மத சுதந்திரத்தின் மீதான மற்றுமொரு தாக்குதல் எனவும் விமர்சித்துள்ளார்.
பொதுசுகாதாரத்திற்கு அவசியமானது என தெரிவித்து கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் ஜனாஸாக்களை இலங்கை அரசாங்கம் எரியூட்டியது எனவும் இது முஸ்லீம் மக்களின் குடும்பங்களுக்கு பாரிய மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தது எனவும் மீனாட்சி கங்குலி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
https://www.hrw.org/news/2021/05/04/sri-lanka-face-covering-ban-latest-blow-muslim-women