சிந்து ஆர்
“கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே உள்ளன. அதை மீண்டும் கடுமையாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
கேரளத்தில் இரண்டாம் அலை கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 41,953 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 58 பேர் மரணம் அடைந்துள்ளனர். கேரளத்தில் மொத்தம் 3,75,658 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “டெஸ்ட் பாசிட்டிவ்விட்டி சதவீதம் குறையவில்லை. கொரோனா பரவலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே உள்ளன. அதை மீண்டும்p கடுமையாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் மருத்துவ மாணவர்களையும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பயன்படுத்த உள்ளோம். ஆக்ஸிஜன் பிரச்னை கேரளத்தில் இல்லை.
தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் அவசியத்துக்கு வழங்கும் வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் கிடைக்காது என மருத்துவமனைகள் தேவைக்கு அதிகம் சேர்த்துவைக்க வாய்ப்பு உள்ளது. ஒரு ஆஸ்பத்திரியில் எத்தனை நோயாளிகள் இருக்கிறார்கள் என பார்த்து அதற்கு ஏற்ப ஆக்ஸிஜன் ஸ்டாக் வைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதை கண்காணிக்க வேண்டும். சுகாதாரத்துறை தினமும் ஆக்ஸிஜன் இருப்பு குறித்து கணக்கெடுக்க வேண்டும்.
இறக்குமதி செய்யும் திரவ ஆக்ஸிஜன்களில் ஆயிரம் மெட்ரிக் டன் கேரளத்துக்கு வழங்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கிறது. இருப்பு குறைகிறது. எனவே முதற்கட்டமாக 500 மெட்ரிக் டன் கேரளத்திற்கு அனுமதிக்க வேண்டும். மேலும் 500 மெட்ரிக் டன் கேரளத்துக்காக ஒதுக்கி வைக்க வேண்டும் எனவும் பிரதமரிடம் கோரியுள்ளோம். ஆலப்புழாவில் தொற்று அதிகரித்து வருகிறது. அதற்கு காரணம் என்னவென்று ஆராயும் பணி நடந்துவருகிறது. மெடிக்கல் முடித்த மாணவர்கள் பதிவு செய்ய காத்திருக்கிறார்கள். அதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் தற்காலிக பதிவு செய்துவிட்டு அவர்களும் களத்தில் இறங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நம் மாநிலத்தில் மின்சார வாரியம் மற்றும் வாட்டர் போர்டு ஆகியவை மக்களிடம் பாக்கித்தொகையை வசூலிக்க இறங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த காலக்கட்டத்தை கருத்தில் கொண்டு இரண்டுமாதம் அதை நிறுத்தி வைக்க வேண்டும். வங்கிகள் ரெக்கவரி செய்வதை தள்ளிப்போட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். இரண்டாவது டோஸ் தடுப்பூசி எப்போது எடுக்க வேண்டும் என்பதில் பலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி மூன்று மாதம் கடந்து எடுப்பது மிகவும் நல்லது என கூறுகிறார்கள். எனவே மக்கள் அவசரப்பட்டு முண்டியடிக்க வேண்டாம்.
50 லட்சம் டோஸ் கோவிஷீல்ட், 25 லட்சம் டோஸ் கோவாக்ஸின் அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் கேரளம் முன்னால் உள்ளதாக பிரதமருக்கு அறிவித்துள்ளோம்” என்றார்.
இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று திடீரென வெளியிட்ட அறிவிப்பில், “கேரளத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. எனவே நாளை மறுநாள் (மே 8) காலை 6 மணி முதல் மே 16 வரை கேரள மாநிலத்தில் முழு லாக்டெளன் அறிவிக்கப்படுகிறது” என கூறியுள்ளார்.