கொரோனா பரவலைத்தடுக்கும் பொருட்டு பிரித்தானிய பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை பிரான்ஸ் விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டதாக அறியப்பட்ட b.1.617 கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளதால் பிரித்தானியாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை பிரான்ஸ் அரசாங்கம் விதித்துள்ளது.
அதன்படி பிரித்தானியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசாங்கம் கூறியுள்ளது. b.1.617 என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா அதிக அளவில் பரவக் கூடியது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்ஸில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளதால் அங்கு பல தளர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பி.1.617 வகை வைரஸ் தற்போது உலகளவில் 53 நாடுகளுக்குப் பரவியுள்ளது.
இந்த வகை வைரஸ்கள் மூன்று வகைகளாக உள்ளன. பி.1.617.1, பி.1.617.2, பி.1.617.3 ஆகிய பிரிவுகளில் உள்ளன. பி.1.617.1 வகை வைரஸ்கள் 41 நாடுகளிலும், பி.1.617.2 வகை உருமாற்ற வைரஸ் 54 நாடுகளிலும், பி.1.617.3 வகை வைரஸ் 6 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனைத் தடுக்க கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.