“நான் செய்தவற்றை அன்றி- செய்திருக்க வேண்டியவை, செய்திருக்கக் கூடியவை பற்றியே சிந்திக்கிறேன்.”-பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்!

Date:

“நான் செய்தவற்றை அன்றி- செய்திருக்க வேண்டியவை, செய்திருக்கக் கூடியவை பற்றியே சிந்திக்கிறேன்.”-பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்.

பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் 77 ஆவது பிறந்த நாள் இன்று. அவர் பற்றிய தொகுப்பினை எழுத்தாளர் சிராஜ் மஸுர் எழுதிய கட்டுரையினை Newsnow வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

ஆரம்ப காலத்தில் வாசிப்பின் வழியே கண்டடைந்த எழுத்தாளுமை அவர். பின்னர் அவருடன் நேர்ப் பரிச்சயம் ஏற்பட்டபோது, வயசு வேறுபாடுகளைத் தாண்டிப் பழகும் மிக இயல்பான மனிதராக இருந்தார். அதன் பிறகு பேராதனையில் பட்டப்பின்படிப்பு மாணவராக அவரது வகுப்பறையில் அமரக் கிடைத்தது.

ஒரு பேராசிரியருக்கே உரித்தான அறிவும் தீட்சண்யமும் நிறைந்தவர். எதுவித பந்தாவும் இல்லாத புலமையாளர். கல்விப் புலத்தில் அவரைப் போல அடக்கமானவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.பேராசான் அவர்!

வெற்றுப் புகழாரத்தை அவர் ஒருபோதும் விரும்பியவரல்ல. மாற்றுக் கருத்தை முன்வைக்கும்போது கூட, அதைக் கூர்ந்து நோக்கும் மனவிசாலம் கொண்டவர். ஒன்றில் ஏற்பார் அல்லது மறுப்பார் அல்லது ஒரு மெல்லிய சிரிப்போடு அதைக் கடந்து செல்வார்.அதுதான் நுஃமான் சேர்.

அமைதியும் ஆழமும் நிறைந்த பேராசிரியரை, கடந்த வருடம் நான் வெளியிடத் திட்டமிட்டிருந்த ஒரு சஞ்சிகைக்காக நேர்காணல் செய்திருந்தேன். இவ்வருட இறுதிக்குள்ளாவது அதை வெளியிட்டாக வேண்டும். இன்னமும் வெளிவராத அந்த விரிவான நேர்காணலின் முதல் கேள்வியையும், அதற்கான அவரது பதிலையும் இங்கே பதிவிடுகிறேன்.

எம்.ஏ.நுஃமான் யார்? கவிஞரா? எழுத்தாளரா? ஆய்வாளரா? ஆசிரியரா? பதிப்பாசிரியரா? இதழாசிரியரா? திறனாய்வாளரா? மொழியியலாளரா? கடந்து வந்த உங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் எதில் அதிகம் திருப்தி கொள்கிறீர்கள்? அல்லது உங்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

யாருக்கும் ஒற்றை அடையாளம் என்று ஒன்று இருக்காது. பன்முகப்பட்ட அடையாளம் உடையவர்கள்தான் நாம். நீங்கள் கேட்ட எல்லாருமாக நான் இருக்கிறேன். இவற்றுள் சில எனது தொழில் சார்ந்த அடையாளம், சில எனது இலக்கிய ஈடுபாடு சார்ந்த அடையாளம். இவை ஒவ்வொன்றிலும் எனக்கு வெவ்வேறு அளவில் திருப்தி உண்டு. ஒன்றிலும் பூரண திருப்தி என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு துறையிலும் நான் செய்திருக்கக் கூடியவை அதிகம். ஆனால் சாதித்தவை சொற்பம்தான்.

ஒரு படைப்பாளியாகத்தான் நான் முதலில் வெளிப்பட்டேன். 1960களின் தொடக்கத்தில் நான் எழுதத் தொடங்கினேன். ஆனால், கடந்த அறுபது ஆண்டுகளில் அத்துறையில் நான் சாதித்தவை மிகக் குறைவு. நான் சம்பந்தப்பட்ட எல்லாத் துறைகளிலும் அப்படித்தான். சுய திருப்தி அற்ற ஒரு மனநிலை எனக்கு வாய்த்திருக்கிறது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எனது ஐம்பதாவது வயதில் மூன்றாவது மனிதனுக்காக பௌசர் என்னைப் பேட்டிகண்டபோது, இன்னும் பத்து ஆண்டுகள் வாழக்கிடைத்தால் ஏதும் உருப்படியாகச் சாதிக்கலாம் என்று சொல்லியிருந்தேன். ஆனால், அதிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. அப்படி ஏதும் சாதித்தவிட்டதான மூட நம்பிக்கை எதுவும் எனக்கு இல்லை.

நாற்பது வயது தாண்டமுன் இறந்துபோன பாரதி, புதுமைப்பித்தன் ஆகியோருடன் ஒப்பிடும்போது, வறுமைக்குள் மூழ்கி, உயிர்வாழ்வதற்கான போராட்டத்துள் தத்தளித்துக்கொண்டு அவர்கள் புரிந்த சாதனைகளுடன் ஒப்பிடும்போது, நாங்கள் ஒன்றுமே இல்ல என்ற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை.

நான் செய்தவற்றை அன்றி செய்திருக்க வேண்டியவை, செய்திருக்கக் கூடியவை பற்றியே சிந்திக்கிறேன். எனக்கு மேலே இருக்கும் என் முன்னோடிகளைப் பற்றிச் சிந்திக்கின்றேன். அப்படிச் சிந்திக்கும்போது ஒரு சுய திருப்தியும் பெருமையும் அடைவதற்கான காரணம் எதுவும் இல்லை. அப்படி ஏதும் இருந்தால் அதுபற்றி மற்றவர்கள்தான் சொல்லவேண்டும்.

Popular

More like this
Related

முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பலஸ்தீனம்.அதை விட்டுவிடாதீர்கள்”: அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு!

காசாவில் இப்போது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவை முழுமையாகக் கட்டுப்படுத்த...

கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் (EASCCA )மாநாட்டு மண்டபம் ஏறாவூரில் திறந்து வைப்பு!

ஏறாவூரில் அமையப் பெற்றுள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் EASCCA மாநாட்டு...

சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர்...

சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை சார்பில் வெலிகம மத்ரஸதுல் பாரி மாணவன் பங்கேற்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவுதி அரேபியா தூதரகமும் இணைந்து கடந்த...