தகவல் என்பது குறித்த செய்தியின் அறிவிப்பு வடிவமாகும்.எனவே இது தரவு,அறிவு எனும் கருத்துப்படிமங்களோடு தொடர்புபட்ட சொல்லாகவே இருக்கின்றது .ஒரு நிகழ்வின் உறுதியின்மை என்பது அதன் நிகழ்வின் நிகழ்தகவு ஆகும். இது நிகழ்தலுக்கு தலைக்கிழ் விகிதத்தில் அமைகின்றது. ஒரு நிகழ்வு கூடுதலான உறுதியின்மையோடு
இருந்தால் அதன் உறுதியின்மையைத் தீர்க்க கூடுதலான தகவல் தேவையாகும்.
தகவல் உரிமை என்பது இந்தச் சட்டத்தின் கீழ் எந்தவொரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனத்தின் கையிலோ அல்லது கட்டுப்பாட்டிலோ உள்ள தகவலைத் தெரிந்து கொள்ள மற்றும் தகவலைப் பெறும் உரிமையை குறிக்கும். அரச அலுவகத்திலுள்ள பணி ஆவணங்கள், பதிவேடுகளை மேலாய்வு செய்வதற்கு ஆவணங்கள் அல்லது பதிவேடுகளின் குறிப்புகளை எடுத்தல் சான்றலிக்கப்பட்ட நகல்களைப் பெறுதல், பொருட்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுதல் என்று கூற முடிகின்றது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முக்கியத்துவம் பற்றி சிரேஷ்ட ஊடகவியலாளர்களிடம் வினவிய போது அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
“தகவல் அறியும் உரிமை சட்டம் அரச வளங்கள் உத்தியோகத்தர்களால் வீணாவதை தடுக்கின்றது” என்கிறார் நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீன் அவர்கள்,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அரசாங்க திணைக்களங்களில் தகவல் உரிமைகளை வழங்குவதற்கு பொறுப்பான அதிகாரியுடன் தொடர்புகொண்டு எங்களுக்கு தேவையான தகவல்களை கோரலாம்.அதற்கான விண்ணப்பத்தை நேரடியாகவும் , ஒன்லைன் மூலமும் கோரிக்கை விடுக்கலாம்.இது பொது மக்களுக்கு சிறந்த வாய்ப்பு.உலகத்தில் 115ற்கு மேற்பட்ட நாடுகளில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் சிறப்பாக அமுல்படுத்தப்படுகின்றது .இதில் கடைசியாக இலங்கை அதன் பிறகு ஆப்கானிஸ்தானில் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.இந்த சட்டத்தின் மூலம் அரச செயற்பாடுகளான நிதி ஒதுக்கீடு, எவ்வாறு பணம் செலவு செய்யப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும் .எங்களுடைய பத்திரிகையில் பணிபுரிந்த பல ஊடகவியலாளர்கள் பல தகவல்களை இச் சட்டத்தின் மூலம் பெற்று அதனை நாங்கள் செய்திகளாக மாற்றியுள்ளோம்.நாட்டின் பாதுகாப்பு தவிர்ந்த தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.இது இலகுவானதும் குறிப்பிட்ட கால அவகாசம் இருக்கும்.பதில் மறுக்கப்படும் போது அதனை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்ய முடியும்.2017 பெப்ரவரி மாதம் இச் சட்டம் அமுலுக்கு வந்தது .இச் சட்டத்தினூடாக சங்கங்களும், சிவில் அமைப்புக்களும் 1994 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக போராடி வந்துள்ளன.நல்லாட்சிக்கான ஊடகங்களின் போராட்டத்தின் அடிக்கல்லாக இது அமைந்தது.1988 ஆம் ஆண்டின் ஊடக சுதந்திரம் மற்றும் சமூக பொறுப்பு பற்றிய கொழும்புப் பிரகடனும் இதனை ஒரு கோரிக்கையாக அரசாங்கத்திடம் முன்வைத்தது.இச் சட்டம் ஊடகவியலாளர்களுக்குரியது என்று பலர் கருதுகின்றனர் ஆனால் அப்படி இல்லை இது எல்லோருக்கும் உரியதாகும்.மறைக்கப்பட்டுள்ள பல உத்தியோகபூர்வ தகவல்களை மக்கள் நலன் கருதி வெளிக்கொண்டு வருவதற்காக ஊடகவியலாளர்கள் இதனை பயன்படுத்துகின்றனர்.
இச் சட்டத்திலே கொள்கை வகுப்பில் பொது மக்களினுடைய பங்களிப்பை மேம்படுத்துகின்றது.அதாவது அரசாங்கத்தினுடைய செயற்பாடுகளில் பகிரங்கத் தன்மையும், கணக்குக் காட்டுவதையும் உறுதிப்படுத்துகின்றது.இதன் மூலம் அரச வளங்கள் உத்தியோகத்தர்களால் வீணாவதை தடுக்கின்றது.
என்னுடைய ஊடகவியல் வாழ்க்கை அனுபவத்தில் சாதாரணமாக தேடி எடுக்க முடியாத ஒரு தகவலை இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுக் கொண்டேன் என்கிறார் MediaLK இன் ஸ்தாபகர் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2007 இற்கு முன்னர் பொதுமக்களுக்கு தேவையான தகவலை பெற்றுக் கொள்ள கூடிய வாய்ப்பு மிகக் குறைவாகவே இருந்தது. அரச உத்தியோகத்தர்களிடம் எங்களுக்கு தேவையான தகவலை கேட்கும் போது தகவல் கிடையாது என நிராகரித்து விடுவார்கள்.உதாரணமாக:சமூர்த்தி தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ள உரிய அதிகாரிகளிடம் சென்றால் தகவலை தராது விரட்டி விடுவார்கள்.ஆனால் இந்த தகவல் அறியும் உரிமை சட்டம் அமுலுக்கு வந்த பின்னர் பொதுமக்களுக்கு கிடைக்கக் கூடிய உரிமைகளை வழங்காது இருப்பது குறைந்துள்ளது.ஒழுங்காக பூரணப்படுத்தப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்ப படிவத்தை அனுப்புவதன் மூலம் எங்களுக்கு தேவையான தகவலை பெற்றுக் கொள்ள முடியும்.இதன் மூலம் ஒருவருடைய பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு காண முடிகிறது.அத்தோடு பெரும்பான்மையானவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தை தனிப்பட்டவர்களுடைய பிரச்சினைகள் மற்றும் குறித்த கிராமத்திலுள்ள பொதுவான பிரச்சினைகளை வெளிக் கொண்டு வர பயன்படுத்துகின்றனர்.என்னுடைய ஊடகவியல் வாழ்க்கை அனுபவத்தில் சாதாரணமாக தேடி எடுக்க முடியாத ஒரு தகவலை இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றுக் கொண்டேன்.
உதாரணமாக,ஒரு ஊரில் பாதை புணரமைப்பு செய்யப்பட்டிருந்தால் அதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அதற்காக செலவிடப்பட்ட பணத்தொகைக்கான பற்றுச்சீட்டையும் பெற்றுக் கொள்ள முடியும்.அத்தோடுஇந்த நாட்டின் பாரியளவிலான திட்டங்கள் சம்பந்தமாகவும் தகவலை பெற்றுக் கொள்ள முடியும்.
உமா ஓயா திட்டத்தினால் பாதிக்கப்பட்ட நிறைய மக்களுக்கு நஷ்டஈடு கிடைக்காமல் இருந்தது பின்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உரிய மக்களுக்கான நஷ்டஈடு கிடைக்கப்பெற்றது.அதனால் வருடக் கணக்கில் தீர்வு கிடைக்காத பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைப்பதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் பாரிய அளவிலான பங்களிப்பை வழங்கியுள்ளது எனலாம்.
“எனக்கு தகவல் தர முடியாது என மறுத்தார்கள்” என்கிறார்
பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் ஆலோசகர் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளரான எம்.எஸ் அமீர் ஹுசைன்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் என்னுடைய அனுபவத்தை பொறுத்தவரையில் ,மாவனெல்லை பதுரியா மத்திய கல்லூரிக்கு 3 கோடி 55 இலட்சம் ரூபா நிதி சபரகமுவ மாகாண சபையால் ஒதுக்கப்பட்டு ஒரு கேட்போர் கூடத்தை நிர்மாணித்து கொடுக்க 2015 ஆம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதற்கான நிதி ஒதுக்கீட்டை சபரகமுவ மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த மஹீபால ஹேரத் 2015 ஆம் ஆண்டு செய்திருந்தார்.இந்த நிதி ஒதுக்கீட்டை பயன்படுத்தி கேட்போர் கூட நிர்மாண வேலைகள் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு கட்டிட நிர்மாணம் 2017 இல் ஆரம்பிக்கப்பட்டு 2019 இல் பூர்த்தி செய்யப்பட்டு கட்டிடம் பாடசாலைக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்று இருந்தது.ஆனாலும் இந்த கட்டிட நிர்மாணப் பணிகள் 2018 ஆம் ஆண்டாகியும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.அதனால் நான் அது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மாவனெல்லை வலயக் கல்விக் காரியாலயத்திடம் தகவல் கோரும் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்தேன்.அதன்படி அந்த விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்பட்டு சரியாக 14 நாட்களில் நான் மீண்டும் கல்விக் காரியாலயத்திற்கு சென்று அதுவரையில் எனக்கு பதில் கிடைக்காததால் உரிய அதிகாரியிடம் வினவினேன் .அப்போது அந்த அதிகாரி உடனடியாக அப்போதே கேட்கப்பட்ட தகவல்களை எனக்கு வழங்கினார்.அக் கட்டிட நிர்மாணத்திறாகாக 03 கோடி 58 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் அதில் இரண்டு வருட காலப்பகுதிக்குள் உரிய கட்டிட நிர்மாணத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட கட்டிட நிர்மாண நிறுவனம் (construction company) அதுவரையில் 17 சதவீதமான வேலைகளை மாத்திரமே செய்திருப்பதாகவும் அதற்காக 56 இலட்சம் ரூபா மாத்திரம் செலவு செய்திருப்பதாகவும் இதற்கிடையில் மீதிப் பணம் அந்த கட்டிட நிர்மாண வேலைகள் தாமதம் அடைந்ததால் தெஹியோவிட்டைப் பிரதேச பாடசாலையொன்றின் கட்டிட நிர்மாண வேலைகளுக்காக செலவிடப்படுவதாகவும் தகவல் வழங்கப்பட்டது.ஏன் இவ்வாறான ஒரு அநீதி இழைக்கப்பட்டது என்ற வினாவை அந்த அதிகாரியிடம் தொடுத்த போது அதற்கான பதிலாக அவர் தெரிவித்தது அந்த தகவல்கள் வேரொரு தகவல் விண்ணப்பத்தின் ஊடாக மாகாண கட்டிட நிர்மாண பொறியல் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த திணைக்களம் ரம்புக்கனையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.அவரால் வழங்கப்பட்ட தகவல்களுடன் மறு நாள் ரம்புக்கனையில் அமைந்துள்ள மாகாண கட்டிட நிர்மாண திணைகளத்திற்கு சென்று பிரதம பொறியியலாளரை சந்தித்து அவரிடம் வினவினேன் .அப்போது அவர் அந்த தகவலை வெளிப்படுத்த முடியாது என மறுத்தார்.பின் மாவனெல்லை வலய கல்வி திணைக்களத்திடம் தான் தகவல் கோரிக்கை விண்ணப்பம் படிவம் மூலம் பெற்ற தகவல்களை காண்பித்து மீண்டும் தகவல் விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்து உரிய தகவல்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டேன் .அப்போது உடனடியாக செயல்பட்ட அந்த அதிகாரி சகல ஆவணங்களும் அடங்கிய பைலுடன் என்னிடம் வந்து கட்டிட நிர்மாண வேலைகளின் தாமதிற்கான காரணங்களை கூறினார் .
தகவல் அறியும் உரிமை குடிமக்களுக்கான உரிமையாகும் என்கிறார் ,
ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்காவின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட அலுவலர் பிரியா போல்ராஜ் ,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தகவல் தொடர்பான 2017 ஆம் ஆண்டு வவுனியாவிலுள்ள பல கிராமங்கள் கடுமையான வரட்சியால் பாதிக்கப்பட்டிருந்தது.இதனால் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.வவுனியா வெங்கல செட்டிக்குளம் பிரதேச செயலகத்திலுள்ள வாரிக்குட்டியூரும் இவ்வாறு வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கொண்டிருந்தது.பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வரட்சி நிவாரணம் வழங்கும் திட்டம் கமநல சேவைகள் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதும் அவை பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்றடையவில்லை.உழுந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட எட்டு குடும்பங்களுக்கு மட்டுமே ரூபா 8400 வீதம் வழங்கப்பட்டிருந்தது.வாரிக்குட்டியூர் மக்கள் இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக கமநல சேவைகள் திணைக்களத்திடம் தகவல் கோர தீர்மானித்தனர்.தகவல் அறியும் விண்ணப்பத்தில் இரண்டு கேள்விகளுக்கான தகவல்களை பெற்றுக் கொண்டனர்.வரட்சி நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நீதி, வரட்சி, நிவாரணத்தை பெற்றுக் கொள்ள தகுதியானவர்களை தெரிவு செய்வதற்காக பயன்படுத்திய அடிப்படை நியமங்கள் எவை என்பதாகும்.கிடைத்த தகவலை பயிரிட்ட பயிரின் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது என்பதுடன் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்குவதற்கு போதுமான நிதி அரசாங்கத்தால் பிரதியைக் கொண்டு கமநல சேவைகள் திணைக்களத்தை நாடியபோது பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் இந்த நிவாரணம் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.இவ்வாறான பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் இச் சட்டத்தை பயன்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தகவல் அறியும் உரிமை குடிமக்களுக்கான உரிமையாகும். தகவலறியும் உரிமை சட்டத்தின் வரைவு சட்டம் 2002,2003 காலப்பகுதியில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்ட போதும் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெறவில்லை.அக் காலப்பகுதியிலேயே இச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு சட்டத்தை கொண்டு வந்த தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை உள்ளது.இலங்கையில் தகவலறியும் உரிமையை சட்டமாக்குவதில் ஊடகங்கள் பாரிய பங்களிப்பு செய்கின்றது. தகவலறியும் உரிமைச் சட்டத்தை பொதுமக்கள் தற்போது பெரிதும் அனுபவிக்கின்றனர்.இது எமது நாடு ஒரு தகவல் கலாசாரத்தை நோக்கி மிக மெதுவாக சென்று கொண்டிருப்பதை காணலாம்.
அப்ரா அன்ஸார்.