நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முசலி பிரதேச சபை உறுப்பினர் பி.எம். முஜீபுர் றஹ்மான் முன்வைத்த பிரேரனை சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு உரியவர்களுக்கு சபை மூலமாக பிரேரனை அனுப்புவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் வட மாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இந்நிகழ்வு நடைபெற்று 31 வருடங்கள் கடந்திருக்கின்றன. கடந்த 31 வருடங்களாக வடமாகாண முஸ்லிம்களின் விவகாரங்கள் போதுமான அளவிற்கு கருத்தில் எடுத்துக் கொள்ளப்படவோ அல்லது அவர்களுக்கான போதுமான தீர்வுகள் கிடைத்து விட்டதாகவோ இல்லை. தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இதுவரை நீதி வழங்கப்படவில்லை என்றே அவர்கள் கூறுகின்றனர்.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது எத்தனை முஸ்லிம்கள் மீள்குடியேறினார்கள் என்பதிலும், எத்தனை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன என்பதிலும் மதிப்பீடு செய்யப்படுகின்ற விடயமாக இருக்க முடியாது. மாறாக அவர்களின் பூர்வீக உரித்து அங்கீகரிக்கப்படுவதிலும், அவர்களது சுயாதீனமான அரசியல், பொருளாதார, சமூக விவகாரங்கள் உறுதி செய்யப்படுவதிலும் தங்கியிருக்கின்றது.
அந்த வகையில் நான் பின்வரும் தீர்மானங்களை இங்கு முன்மொழிகின்றேன்.
1. 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்திற்கான காரணம் என்ன? என்பதை ஆராய்ந்து தெரியப்படுத்துவதற்கும் அவர்களின் மீள்குடியேற்றத்தை சிறப்பாக மேற்கொள்வதற்கும் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோருகின்றனர்.
2. வடக்கு மாகாணம்; இங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களினதும், அவர்களது சந்ததியினரதும் பூர்வீக வாழிடமாகும். அவர்கள் தாம் விரும்பும் காலத்தில் இங்கு மீள்குடியேறுவதற்கான அனைத்து உரித்துக்களையும் உடையவர்கள். இவர்களும் மீளத்திரும்பும் உரிமைக்கு உட்பட்டவர்கள்.
3. வெளியேற்றப்பட்ட மக்கள் நீதிப் பொறிமுறை ஒன்றைக் கோருவதற்கும், தமக்கான இழப்பீட்டினைக் கோருவதற்கும் முழுமையான உரித்துடையவர்கள்.
4. வடக்கு முஸ்லிம்கள் தாம் வாழ்கின்ற பிரதேசங்களில் தம்மோடு ஒன்றாக வாழ்கின்ற தமிழ் மக்களோடும், சிங்கள மக்களோடும் எவ்வித பகைமை உணர்வுமின்றி, ஐக்கியமாகவும், நல்லிணக்கத்தோடும் அனைத்துவிதமான சுயாதீனங்களையும் பேணும் வகையில் வாழ்வதற்கு உரித்துடையவர்களாவர்.
5. வடமாகாண சபை மற்றும் அதன் நிருவாகம் அவர்களின் மீள்குடியேற்றத்தை மனிதாபிமான அடிப்படையில் நிலைமாறுகால நீதியின் அடிப்படையில் நோக்குதல் வேண்டும்.
6. வடக்கு முஸ்லிம்கள் மீள்குடியேறுகின்ற அவர்களது தாயக பூமியில் சுபீட்சமான வாழ்வு, ஆரோக்கியமான சுகாதாரம், நன்நெறியான கல்வி மற்றும் சிறந்த உட்கட்டமைப்பை பெற்றுக் கொள்ளும் உரிமை இவர்களுக்கும் உண்டு. எனவே, அரசு மற்றும் வடமாகாண சபை இவைகளை நியாயமாக மேற்கொள்ளுமாறு கோருகிறோம்.
மேலும் வடமாகாண முஸ்லிம்களின் அரசியல் செல்வாக்கைப் பெற்ற மக்கள் பிரதிநிதியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியுதீன் அவர்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒருவர் என்ற அடிப்படையில் அவருக்கு நியாயமான நீதி கிடைக்கக் கோருகிறோம்.
வடக்கு முஸ்லிம் மக்களின் சுபீட்சமான வாழ்வை உறுதி செய்வதற்கு குறிப்பாக முஸ்லிம் மக்களும், தமிழ் மக்களும், இலங்கை அரசும், சர்வதேசமும் முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.
தமிழ் மக்களும், தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் முஸ்லிம் மக்களை அரவணைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன், எமது மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் அரச அதிகாரிகளும், அரச நிறுவனங்களும் மென்போக்கை கடைபிடிக்க வேண்டும் என்பதும் எமது உள்ளார்ந்த எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.