ஒருவரை நாம் விரும்புவதற்கும், வெறுப்பதற்கும் அடிப்படை அவர் கொண்டுள்ள குணாதிசியங்களே. உங்கள் செயல்கள் உங்களைப் பற்றிய அபிப்பிராயங்களை அடுத்தவர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும். அது அவர்களுக்கு உங்களுடன் எவ்வாறு பழக வேண்டும் என்ற வரையறையை வகுத்துக் கொடுக்கும்.
மனிதர்கள் வித்தியாசமானவர்கள். குணங்கள், பண்புகள் பலதரப்பட்டவை. அனைத்து குணங்களையும் அனைவராலும் ஏற்க முடியாது. அதற்காக அடுத்தவர்களுக்காக குணங்களை மாற்றிக் கொண்டிருக்கவும் முடியாது. இருப்பினும் ஒரு சில குணங்கள் கட்டாயம் மாற்றப்பட வேண்டியவை. அவ்வாறு மாற்றிக் கொள்ள வேண்டிய ஒரு குணம் அடிமைத்தனம். விருத்தி செய்ய வேண்டிய ஒரு குணம் அடக்கம். இவற்றை உளவியலின் அடிப்படையில் சற்று அலசுவோம்.
அடக்கம் vs அடிமைத்தனம்.
மனமுதிர்ச்சியை வெளிக்காட்டும் ஒரு முக்கிய பண்பு ஒருவர் கொண்டுள்ள தன்னடக்கமாகும். தேவையற்ற ஆர்ப்பாட்டமில்லாமல், தற்புகழ்ச்சியில்லாமல், அடுத்தவரைக் காயப்படுத்தாமல் மனித மனங்களை மதித்து நடப்பதை இது குறிக்கும்.
👉 இது மனதிற்கு அமைதியை தரும்.
👉 உளஆற்றல்களை வெகுவாக அதிகரிக்கும்.
👉 நிதானம் மற்றும் நுணுக்கத்தை அதிகரிக்கும்.
👉 பிறர் மனதில் இடம்பிடிக்கவும், நல்லெண்ணத்தை விதைக்கவும், ஆளுமைக் கவர்ச்சியை உண்டுபன்னவும் கூடிய மிக முக்கியமான ஒரு நற்பண்பு.
இதை நாம் அனைவரும் கண்டிப்பாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அடிமைத்தனம் என்பது அடக்கம் போன்று காட்சியளிக்கும். ஆனால் அதற்கு முற்றிலும் முரணான ஒரு பண்பு. அடுத்தவரின் அனைத்து சொற்களுக்கும் அடிமை போன்று ஒத்திசைந்து போவது இதன் அடிப்படை அம்சம். தவறு, பிழை என்று தெரிந்தும் எதிர்க்காமல் ஏற்றுக் கொண்டு அடுத்தவர் சொற்படி நடத்தல் அல்லது இணங்கிப் போதலை இது குறிக்கும். தன் உரிமைக் குரலை தானே ஊமையாக்கிக் கொண்டு தன் வாழ்வை அடுத்தவர் கையில் ஒப்படைத்து கோழையாய் வாழ்வதே இதுவாகும். துணிச்சலற்றவர்களின் ஓர் பிடிமானம் இது.
👉இது ஒரு போதும் மன அமைதியை தராது. 👉மாறாக மனக்குழப்பத்தை விளைவிக்கும்.
👉உள ஆற்றல்களை குறைக்கும்.
👉தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை எண்ணங்களுக்கு வித்திடும்.
👉மேலும் இப்பண்பு யாரிடம் இருக்கிறதோ அவருக்கு பிறரிடம் எவ்வித மதி்ப்பும் இருக்காது. தேவைக்கு பயன்படுத்தி விட்டு தூக்கியெறிப்படும் கறிவேப்பிலை போன்று இவர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.
👉இவர்களின் உணர்வுகளுக்காே, விருப்பு, வெறுப்பிற்கோ அங்கீகாரம் கிடைக்காது.
தன்னை சரியாக வெளிக்காட்டாமல் தன் வாழ்வின் பக்கங்களுக்கு அடுத்தவர்களின் வரிகளால் உயிர் கொடுத்ததன் விளைவு இது.
அடிப்படையில் இதற்கு அவர்கள் அடக்கம் என்று பெயர் கொடுத்தாலும் உண்மையில் அவர்களின் ஆழ்மனதில் இருப்பது பயம் மட்டுமே.
அந்தப் பயம்,
👉 ஒருவரின் அன்பை இழந்து விடுவோமாே.
👉 பொருளாதாரம், சமூக அந்தஸ்த்து, அங்கீகாரம், ஒத்துழைப்பு போன்றவற்றில் ஏதோவொன்று அவர்களை எதிர்ப்பதால் கிடைக்காமல் போகுமோ….
👉 தான் அவமானப்படுத்தப்பட்டு விடுவேனோ
👉 சவால்கள், பிரச்சினைகள் தோன்றுமோ.
போன்ற ஏதோ பயத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றலாம்.அவ்வாறு அடக்கம் என்ற பெயரில் அடிமைத்தனமாக நடந்து கொள்பவர்களில் நீங்களும் ஒருவர் என்றால்.
👉உங்கள் இயலாமையை இனங்காணுங்கள்.
👉 உங்கள் வாழ்விற்கு பிறரிடம் அங்கீகாரம் எதிர்பாரக்காதீர்கள்.
👉உங்கள் இயல்புகள், உணர்வுகள் அலட்சியப்படுத்தப்படும் இடங்கள் உங்களின் களமல்ல. அவர்களின் அரங்கேற்றத்திற்கு வீண் அனுசரனை வழங்காதீர்கள்.
👉முதலில் உங்களை உங்களிடமிருந்து மீட்டுக் கொள்ளுங்கள்.
உங்கள் நியாயமான உணர்வுகளை வெளிப்படுத்தவோ, இயல்பிற்கு அங்கீகாரம் பெறவோ, உரிமையை வென்றெடுக்கவோ அடுத்தவரின் மனத்திருப்தி உங்களுக்கு அவசியமில்லை. உங்களை இழந்து உறவுகளை தக்க வைப்பதன் பயன் தான் என்ன? பொத்தி பொத்தி பாதுகாக்க வேண்டியது போலி உறவுகளை மட்டும் தான். உண்மை உறவுகளுக்கு அது அவசியமே இல்லை. தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிர்பாராததையும் எதிர் கொள்ள தயாராகுங்கள். வாழ்க்கை வளமாகும்.
றிப்னா ஷாஹிப் (உளவளத்துணையாளர்)