இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கீழ் இயங்கும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் சிங்கள மொழி மூல முறைப்பாட்டு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த கமல் லியனாரச்சியின் மறைவு சிங்கள மொழிமூல ஊடகத்துறைக்கு மட்டுமல்லாது இலங்கை திருநாட்டின் ஊடகத்துறைக்கு பேரிழப்பாகும்.
ஊடகத்துறையில் அவரது பங்களிப்பு ஊடகவியலாளராக, ஊடக வளவாலராக, ஊடக அவதானியாக, ஊடக சமூகத்துடனான நண்பராக என்று பல்வேறு துறைகளிலும் இருந்து வந்தது ஒருவராவார்.
2022 பெப்ரவரி 20 ஆம் திகதி பயாகலையில் திடீர் மாறடைப்பு காரணமாக காலம் சென்ற கமல் லியனாரச்சி அவரது மரணம் வரையில் ஊடகத்துறைக்கான அயராத பங்களிப்பை வழங்கி வந்துள்ளார்.
கமல் லியனாரச்சி ‘யுக்திய’ பத்திரிகை மூலம் ஊடக தொழிலை ஆரம்பிது பின்னர் ‘லக்பிம’ பத்திரிகையில் நீண்ட காலமாக ஊடகவியலாளராக கடமையாற்றியுள்ளார்.
2005 ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாட்டு பொறுப்பதிகாரியாக சிங்கள மொழி மூல முறைப்பாடுகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட அவர் சிறிது காலம் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.
கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் கூட அலுவலகம் வந்த பணியாற்றிய அவரின் இழப்பு சிங்கள மொழி ஊடகத்துறைக்கு ஈடு செய்ய முடியாததாகும்.
அவர் இந்த ஊடகப் பணியை முன்னெடுத்த இவ்வளவு காலமும் எந்த சந்தர்ப்பத்திலும் இன, மத, மொழி அடிப்படையில் பாகுபாடு காட்டியதில்லை.
அனைத்து பேதங்களுக்கு அப்பால் இருந்து சேவையாற்றிய ஒருவராவதோடு ஊடக சுதந்திரம், ஊடகங்களில் வெளிவரும் போலி செய்திகளால் சமூகத்தில் இனங்களுக்கும் மத ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புக்களுக்கு எதிராகவும் போராடிய ஒருவராவதோடு ஊடகவியலாளர்கள் ஊடக பணியை செய்கின்ற போது ஊடக ஒழுக்கக்கோவையை பின்பற்றியவர்களாக சமூகப் பொறுப்புணர்வோடு ஊடக தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற இலட்சியத்தில் பாடுபட்ட ஒருவராவார்.
ஊடகங்களின் தவறானதும் ஒருபக்க சார்பானதுமான போக்கை எப்போதும் கண்டிப்பதற்கு பின்வாகாத ஒருவராவார்.
குறிப்பாக 2010 ஆம் ஆண்டு முதல் அண்மைக்காலம் வரையில் குறிப்பிட்ட சில சிங்கள மொழி மூலமான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் வாயிலாக முஸ்லிம் சமூகம் குறித்த பலவிதமான அவதூறானதும் போலியான செய்திகள் வாயிலாகவும் நெருக்கடி ஏற்படுத்தப்பட்ட போது கமல் லியனாரச்சி அத்தகைய ஊடக நிலையங்கள் மற்றும் தனிப்பட்ட ஊடகவியலாளர்களுடன் உரையாடல்களை நடத்தி ஒருபக்க சார்பான ஊடக நடத்தையால் நாட்டிற்கும் இன ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி எடுத்துக் கூறி முஸ்லிம் விரோத ஊடக நடத்தையை கட்டுப்படுத்த திரைமறைவில் இருந்து குரல்கொடுத்த ஒருவராவார்.
சிங்கள பௌத்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவராக இருந்தாலும் அவரது நண்பர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்களாவர்.
பேருவலையில் அடிக்கடி முஸ்லிம் நண்பர்களது வீடுகளுக்கு சென்று அவர்களோடு இருந்து வந்த உறவை பலப்படுத்திக் கொண்டிருந்த ஒருவராவர்.
விஷேடமாக ரமழான் மாதம் வந்தால் முஸ்லிம் நண்பர்களுடைய வீடுகளுக்கு தாமாகவே சென்று ரமழான் விருந்துபசாரங்களில் பங்குபற்றி பரஸ்பரம் உறவை பலப்படுத்தி வந்த சிறந்த முஸ்லிம் சமூகத்தின் ஊடக நண்பராகவும் திகழ்ந்தார்.
அவர் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் ஒரு அதிகாரியாக கடமையாற்றிய போதும் ஊடகத்துறைக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் போதெல்லாம் நாட்டில் உள்ள ஊடக அமைப்புக்கள், சுதந்திர ஊடக இயக்கம் உட்பட ஊடக தரப்பினரை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுத்த ஒருவராவார்.
ஊடக வெளிப்படுத்தல்களின் தராதரம், ஊடகவியலாளர்களின் அறிவு மட்ட மேம்பாடு என்பவற்றை மேம்படுத்தவொன நாடளாவிய ரீதியிலான ஊடக பயிற்சி செயலமர்வுகள் மூலம் அறிவூட்டல் செய்வது மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு விஜயங்களை மேற்கொண்டு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஊடக தாராதரத்தை பேனுவது பிரதான பணிகளாக அமைந்தன.
நாடளாவிய ரீதியில் ஊடகவியலாளர்கிளன் அறிவிலும் ஆற்றல்களிலும் ஒரு திறன் விருத்தி ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் ஏற்பாடு செய்யும் ஊடக பயிற்சி நெறிகளில் சிறந்த ஈடுபாட்டுடன் பங்குபற்றியதோடு இலங்கை முழுவதிலும் கடமையாற்றும் எல்லா ஊடகவியலாளர்களுடனும் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நின்று அனைவரதும் நண்பனாக செயற்பட்டார்.
ஊடக ஒழுக்கக்கோவை, தகவல் அறிவதற்கான உரிமைச் சட்டம், புலனாய்வு ஊடகவியல் என்று பல துறைகளில் சிறந்த பரிச்சயம் பெற்ற ஊடக வளவாலராக கடமையாற்றிய அவரின் இழப்பு ஊடக சமூகத்திற்கு பேரிழப்பாக அமைவதோடு ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிறடத்தையும் ஏற்படுத்திவிட்டது.
அத்துடன் சிறந்த ஊடகவியலாளரும் ஊடக பயிற்றுவிப்பாளரும் ஊடக ஆலோசகருமாவார்.
தெற்கின் பயாகலையை பிறப்பிடமாகக் கொண்ட கமல் லியனாரச்சி இரண்டு பிள்ளைகளின் தந்தையாவதோடு அவரது மனைவி கமனி லியனாரச்சியும் ஒரு சிறந்த ஊடகவியலாளராவார்.