உக்ரைனின் மிகப்பெரிய நகரங்களான கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷ்யா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவரே உயிரிழந்துள்ளார்.
இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மாணவர்கள் உட்பட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு ரஷ்யா மற்றும் உக்ரைனிடம் இந்தியா வலிறுத்தி வந்தது.
இந்நிலையில் அறிவுறுத்திய சில மணி நேரங்களில் இந்திய மாணவர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் தூதரகத்திடம் இந்திய மாணவர்களை மீட்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கார்கிவ் மற்றும் போர் நடக்கக்கூடிய இடங்களிலிருந்து இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை போரை தொடங்கியது. ஐந்து நாட்களை கடந்து போர் தொடர்ந்து வரும் நிலையில், ஆறாம் நாளான இன்று (மார்ச் 1) தலைநகர் கீவ்-இல் ரஷ்ய படைகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன.
இந்நிலையில் கீவ் நகரில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி உக்ரைனின் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அதுதொடர்பாக உக்ரைனின் இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்’மாணவர்கள் உள்பட அனைத்து இந்தியர்களும் கீவ் நகரில் இருந்து இன்று உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்துகிறோம்.
கிடைக்கக்கூடிய ரயில்கள் அல்லது வேறு போக்குவரத்துகள் மூலம் வெளியேறவும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.