பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களை எதிர்வரும் 20ஆம் திகதி வரை அடையாள அணிவகுப்புக்காக விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று 10 உத்தரவிட்டுள்ளார்.
ஜாஎல, காலி மற்றும் கல்கிஸ்ஸ பிரதேசங்களைச் சேர்ந்த 28 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று இளைஞர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் காவலில் ஒப்படைக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், சம்பவத்தின் சாட்சிகள் அடையாளம் காணப்பட வேண்டியிருப்பதால், சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்துமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த சம்பவத்தில் தமது மூன்று தரப்பினரும் நிரபராதிகள் எனத் தெரிவித்தனர்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான், சந்தேகநபர்களை எதிர்வரும் 20ஆம் திகதி அடையாள வாயிலில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலைக்கு உத்தரவிட்டதுடன், மூவரையும் அன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.