மஹரகம நகரில் இடம்பெற்ற போராட்டத்திற்கு ஆதரவளித்த பொலிஸ் சார்ஜன்ட் இன்று (11) அதிகாலை ஜனாதிபதி மாளிகைக்குள் கூரிய ஆயுதத்துடன் செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ஹோமாகம மாகம்மன பிரதேசத்தை சேர்ந்த நாரஹேன்பிட்டி பொலிஸ் கரேஜில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய சார்ஜன்ட் வசம் 2 அங்குல அகலமும் 10 அங்குல நீளமும் கொண்ட கத்தி கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் சீருடையில் செருப்பு அணிந்திருந்த சந்தேக நபர் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய வந்ததையடுத்து, அவருக்குப் பாதுகாப்பில் இருந்த இராணுவ அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம், சந்தேக நபரை அவருக்குப் பாதுகாப்பில் இருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்ததையடுத்து, பொலிஸாரின் கைத்தொலைபேசி அந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், கடந்த தினம் மஹரகம நகரில் போராட்டத்திற்காக பேரணியாக சென்ற இளைஞர்கள் குழுவிற்கு ஆதரவாக செயற்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.