ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலகும் வரையில் தொடர் வேலை நிறுத்தம் மற்றும் ஹர்த்தால்களை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
அடுத்த சில நாட்களில் நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் தனியார் துறை பணியிடங்களில் இந்த தொழில்சார் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் சிரேஷ்ட உப தலைவர் அனுப நந்துல தெரிவித்தார்.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என்ற மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்கத் தயாரில்லை என்றால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் இன்னும் பொதுமக்களால் கடும் வெறுப்புக்கு ஆளாகியுள்ளதால், தொழிற்சங்க நடவடிக்கை வரை இதனை இழுத்தடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகவும் நந்துல தெரிவித்தார்.
ஏப்ரல் 28 மற்றும் மே 6 ஆம் திகதிகளில் அமுல்படுத்தப்பட்ட ஹர்த்தால், வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களை விடவும் மேம்பட்ட தொழில்சார் நடவடிக்கைகள் இம்முறை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.