முஸ்லிம் சமூகத்தின் கல்வி,பொதுச்சேவைகள் உள்ளிட்ட பல பணிகள், நமது மூதாதையர்கள் ‘வக்பு’ என்ற அடிப்படையில் விட்டுச் சென்ற பாரிய சொத்துக்களின் மூலம் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் நாட்டில் உள்ள பிரதான பாடசாலைகள் அரபுக் கலாசாலைகள், பள்ளிவாசல்கள் போன்றன அடங்குகின்றன.
இலங்கை வரலாற்றில் தேசத்திற்கான பங்களிப்பு செய்தவர்களில் ஒருவராக மதிக்கப்படுகின்ற காலஞ்சென்ற அல்ஹாஜ் என்.டி.எச் அப்துல் கபூர் அவர்களால் ‘வக்பு’ செய்யப்பட்ட ஒரு கல்வி நிறுவனமே மஹரகமவில் அமைந்துள்ள 91 வருடங்களைத் தாண்டிய கபூரிய்யா அரபுக் கல்லூரியாகும்.
இன்று அதனுடைய பரிதாப நிலையானது குறித்த சொத்தை வக்பு செய்தவர்களின் இன்றைய பரம்பரையைச் சார்ந்தவர்களே சூறையாடுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருகின்றது.
இதன் வருமானத்திற்கென வக்பு செய்யப்பட்டிருந்த கொழும்பு கிரோன்ட்பாஸ் இடத்தை அபகரித்தது போதாமைக்கு அரபுக் கல்லூரி அமைந்திருக்கின்ற 17 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட வளாகத்தையும் சூரையாடுகின்ற மிகவும் கேவலமான ஒரு முயற்சி தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.
1980 களிலிருந்து இக்கல்லூரியையும் வளாகத்தையும் பராமரிப்பதில் இதன் பழைய மாணவர்களே முன்னணி வகிக்கின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் அனைவரையும் ஓரம் கட்டி விட்டு சர்வாதிகாரமான முறையில் இச்சொத்துக்களை கைப்பற்றும் முயற்சியில் குறித்த குடும்பத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கடந்த மூன்று வருடங்களாக நீதிமன்ற வழக்கு சென்று கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் ஒரு இடைக்கால உத்தரவை சாதகமாக பயன்படுத்தியே இந்த கபளீகரம் செய்யும் ஈனத்தனமான செயல் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையிலிருந்து இக்கல்லூரியையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் நோக்கில் நேற்று மாலை வெள்ளவத்தை மியாமி மண்டபத்தில் ஒரு விசேட பொதுக் கூட்டத்தை பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கிம், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பாராளுமன்ற அங்கத்தவர்களும் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி சிரேஷ்ட சட்டத்தரணி என்.எம் சஹீத், சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுச்செயலாளர் அஷ்ஷேக் அர்கம் நூராமிக், சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம் அமீன் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட மூத்த உலமாக்களும் பழைய மாணவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இறுதியில் இவ்விடயத்தை கையாள்வதற்காக அரசியல் தலைவர்களையும் உள்ளடக்கிய விசேட செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இக்குழுவின் வழிகாட்டலில் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக கூடியிருந்த அனைவரும் ஏகமனதாக தீர்மானித்தனர்.
இதேவேளை ”மஹரகம, கபூரிய்யா அரபுக் கல்லூரியின் சொத்துக்கள் மாத்திரமன்றி முஸ்லிம் தனவந்தர்களினால் முஸ்லிம் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட பல சொத்துக்கள் இன்று அபகரிக்கப்பட்டுள்ளது. அவற்றை மீட்டெடுப்பது நமது கடமை என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.