நாட்டைச் சூழவுள்ள வெப்பமண்டல ஒன்றிணைந்த வலயத்தின் தாக்கம் காரணமாக தற்போது பெய்து வரும் கடும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை முன்னறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
இதேவேளை களனி, களு, கிங் மற்றும் நில்வலா ஆறுகள் மற்றும் அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
களுகங்கையின் மில்லகந்த நீர் மானியின் நீர் மட்டம் பாரிய வெள்ளப்பெருக்கு மட்டத்திற்கு உயர்ந்துள்ளதாக இன்று அதிகாலை 03:30 மணியளவில் வெளியிடப்பட்ட ஆறுகளின் நீர் மட்டங்கள் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிங் கங்கை, பத்தேகம பிரதேசம் மற்றும் பனடுகம பிரதேசத்தின் நில்வலா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் சற்று வெள்ளப்பெருக்கிற்கு உயர்ந்துள்ளது.