எதிர்வரும் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பில் மொட்டுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்கு தயாராகி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரதமர் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி கூட்டணியும், பிள்ளையான் தலைமையிலான டி.எம்.வி.பி கட்சியும் எதிர்வரும் தேர்தலில் மொட்டுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட ஏற்கனவே தயாராக உள்ளன.
இது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதுடன், கலந்துரையாடலின் பின்னர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமாறு மொட்டுக் கட்சி ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற முறையில் அழைப்பு விடுத்துள்ளதாக ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி இம்மாத இறுதிக்குள் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.