ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் நடந்த மோதலின் போது 23 வயது கால்பந்து வீரர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றதாகவும் மேலும் ஐவர் காயமடைந்ததாகவும் பலஸ்தீனிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதல், பல்லாண்டு காலமாக நீண்டு வருகிறது.
பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் இராணுவத்தை எதிர்த்து போராடி வருகிறது. ஆனால் இந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாகக் கருதி ஒழித்துக்கட்ட இஸ்ரேல் முயற்சிக்கிறது.
இதனால் மேற்கு கரை, காசா முனை பகுதியில் இரு தரப்பும் அடிக்கடி மோதி வருகின்றன.
இந்த ஆண்டில் மட்டுமே இஸ்ரேல், பலஸ்தீன மோதலில் 150 பலஸ்தீனியர்களும், 31 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
பலஸ்தீன நகரத்தில் உள்ள ஜோசப் கல்லறை என அழைக்கப்படும் இடத்திற்கு யூத இஸ்ரேலியர்களை அழைத்துச் செல்வதற்காக இஸ்ரேலிய படை வீரர்கள் நப்லஸ் நகருக்குள் நுழைந்தனர்.
அப்போது இஸ்ரேல் படையினருக்கும், பலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த சண்டையில் அகமத் டராக்மே என்ற பாலஸ்தீனிய இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவர் டுபாஸ் நகரைச் சேர்ந்தவர், அங்குள்ள உள்ளூர் கால்பந்து அணியின் வீரர் என சொல்லப்படுகிறது. இந்த மோதலில் அவர் பங்கு பெற்றிருந்தாரா என்பது குறித்து தகவல் இல்லை.
அகமத் டராக்மே வெஸ்ட் பேங்க் பிரீமியர் லீக் கிளப்பான தகாஃபி துல்கரேமுக்காக கால்பந்து விளையாடியதாக உள்ளூர் பாலஸ்தீனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரபல அரபு கால்பந்து இணையத்தளமான கூரா, இந்த சீசனில் ஆறு கோல்கள் அடித்து அணியின் அதிக கோல் அடித்த வீரராக அவரை அறிவித்தது.
இதேவேளை கடந்த வாரம், இஸ்ரேலியப் படைகள் வடக்கு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனின் நகரில் இராணுவத் தாக்குதலில் 16 வயது பலஸ்தீனிய சிறுமி ஜனா மஜ்தி ஜகர்னேவைக் கொன்றனர்.
ஜகர்னே தனது வீட்டின் கூரையில் பூனையுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.