இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் தொடர் இன்று!

Date:

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹர்திக் பாண்டயா அணியை வழிநடத்த உள்ளார். 2024-ம் ஆண்டு 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சரியான வீரர்களை அடையாளம் காண்பதற்கான தொடக்கமாக இந்த தொடர் அமையும்.

அத்துடன் ஹர்திக் பாண்ட்யாவை 20 ஓவர் அணிக்கான நிரந்தர தலைவராக நியமிப்பதற்கான அடித்தளமாகவும் இந்த தொடர் இருக்கப்போகிறது. மூத்த வீரர்களை பொறுத்தவரை அடுத்த 20 ஓவர் உலக கிண்ணத்தில் இடம் பிடிப்பது கடினம் தான். அதனால் இனி அவர்கள் ஒதுங்கி விடுவதற்கு வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டில் இந்தியா அதிகபட்சமாக மொத்தம் 40 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. 31 வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். இதே போல் இந்த ஆண்டிலும் சோதனை முயற்சியாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷனுடன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சுப்மான் கில் இறங்குவார்கள். மத்திய வரிசையில் துணைத் தலைவர் சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் பலம் சேர்க்கிறார்கள்.

பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக் நம்பிக்கை அளிக்கிறார்கள். கடந்த ஆண்டில் ஆசிய கிண்ண கிரிக்கெட்டின் சூப்பர்4 சுற்றில் இலங்கையிடம் தோல்வி அடைந்த இந்திய அணி அதற்கு பழிதீர்க்க இது சரியான தருணமாகும்.

ஆசிய சம்பியனான இலங்கை அணி தசுன் ஷனக தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. பதும் நிசாங்க, ராஜபக்ஷ, தனஞ்ஜெய டி சில்வா, குசல் மென்டிஸ், சுழற்பந்து வீச்சாளர் வானிந்து ஹசரங்க என அந்த அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால் கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

குறைவான பவுண்டரி தூரம் கொண்ட மும்பை மைதானம் எப்போதும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமானது. அதனால் ரசிகர்கள் ஓட்ட விருந்தை எதிர்பார்க்கலாம். இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் நாணயசுழற்சி முக்கிய பங்கு வகிக்கும்.

இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 8-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு போட்டியில் முடிவில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு  செம்சன், ஹர்திக் பாண்ட்யா (தலைவர்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை: பதும் நிசாங்க, குசல் மென்டிஸ், தனஞ்ஜெய டி சில்வா, சாரித் அசலங்க, ராஜபக்ஷ, தசுன் ஷனக (தலைவர்), ஹசரங்க, சமிக கருணாரத்ன, தீக்ஷன, தில்ஷன் மதுஷன்க, லாஹிரு குமார.

Popular

More like this
Related

*வெலிகமவில் ஆரம்பமான ‘Made in Sri Lanka’ கண்காட்சி*

உள்நாட்டு உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்தும் ‘Made in Sri Lanka’...

2026 வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் பெப்ரவரி ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம்...

டிசம்பர் 29 முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை

டிசம்பர் 29 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் கிழக்கிலிருந்தான மாறுபட்ட...