புத்தளம் மொஹிதீன் ஜும்மா மஸ்ஜித் பெரிய பள்ளிவாசலின் அனுசரணையுடன் புத்தளம் கல்வி, சமூகம் மற்றும் சூழல் அபிவிருத்திக்கான அமைப்பினர் (PULSED) ஏற்பாடு செய்த மஸ்ஜிதுகளினூடாக சமூகத்தை வலுப்படுத்துவோம் செயற்றிட்டத்தின் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மற்றும் தெளிவுபடுத்தல் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
புத்தளம் முஸ்லிம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மஸ்ஜிதுகளின் தலைவர்கள் உட்பட நிர்வாகிகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட “பஹன” ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் அஷ்ஷெக் அப்துல் முஜீப் அவர்கள் சமூகத்தின் கேந்திர நிலையமாக பள்ளிவாசல்கள் இயங்க வேண்டிய காலத்தின் தேவையை தெளிவுபடுத்தினார்.
முஸ்லிம் சமூகத்தின் முன்னால் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்ற சவால்கள், சர்வதேச Islamophobia வின் பிடிக்குள் சிக்குண்டுள்ள இலங்கை முஸ்லிம் சமூகத்தின் நிலை , அத்துடன் புத்தளம் நகர பள்ளிவாசலின் மஹல்லாக்கள் ஒருமுகப்படுத்தப்பட்ட ஒழுங்கில் உயிர்ப்பிக்கப்பட வேண்டிய தேவை குறித்த விரிவான விளக்கத்தை சபையில் முன்வைத்தார்.
PULSED அமைப்பின் நடப்பாண்டிற்கான தலைவர் S.M.M.மபாஸ் அவர்களின் தலைமையுரையில் பள்ளிகளின் நிர்வாகிகள் தற்போதைய பொறுப்புக்களுக்கு மேலதிகமாக சமூகம் சார் பொறுப்புக்களை நேர்மையாகவும் முறையாகவும் நிறைவேற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
புத்தளம் பெரிய பள்ளிவாசலில் கடந்த ஐந்து வருட காலமாக இயங்கி வரும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரிவின் உள நல ஆலோசகராக பணியாற்றும் திருமதி றிபானா மர்யம் அவர்கள் புத்தளத்தில் சமூக ரீதியில் இனங்காணப்பட்ட திருமணம், குடும்ப வாழ்க்கை, விவாகரத்து, சிறுவர் உள நல பாதிப்புகள் போன்ற பிரச்சினைகள் தொடர்பான ஆய்வு ரீதியான கலந்துரையாடலுக்கான தலைப்புகளை முன்வைத்தார்.
புத்தளம் நகரப் பகுதி மஹல்லாக்களின் பிரதிநிதிகளாக கலந்து கொண்ட சகோதரர்கள் உட்பட பலரும் பல்வேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சபையில் முன் வைத்தனர் .
இறுதியாக PULSED அமைப்பின் செயலாளர் சகோ. நாஸிக் ஸமான் அவர்கள் சபையோரின் கருத்துரைகளை ஒழுங்குபடுத்தி நன்றியுரையையும் நிகழ்த்தினார்.
மேற்படி நிகழ்வில் அகில இலங்கை ஜமியத்துல் உலமா புத்தளம் கிளை தலைவர் அஷ்ஷெக் H.M மின்ஹாஜ் (இஸ்லாஹி), உலமாக்கள், புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர் P.M.A மற்றும் றுகுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக்க ஜயசிங்க, பெரிய பள்ளிவாசல் மகளிர் மற்றும் சிறுவர் விவகாரப் பகுதி பொறுப்பாளர் திருமதி. நசீம் நிசாம்தீன், புத்தளத்தின் ஓய்வு பெற்ற மூத்த ஆசிரியர்கள் போன்ற பல பிரமுகர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்வை PULSED அமைப்பின் உறுப்பினர் A. M. M.பஸீல் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
.
(மஹல்லாக்கள்) பள்ளிக்குரிய பிரதேசங்கள் தோறும் நிலவும் குடும்ப பிணக்குகள் , ஒழுக்க, பண்பாட்டு வீழ்ச்சி, கட்டுக்கடங்காத போதை பொருள் பாவனை மற்றும் விற்பனை, மார்க்கத்தை விட்டு தூரமாதல், கல்வி வீழ்ச்சி, வறுமை நிலை அதிகரிப்பு போன்ற பல இன்னோரன்ன விடயங்களில் சமூக நலனுக்காக முன்னின்று செயற்படும் நிர்வாகிகளை பலப்படுத்தி மஹல்லாக்களை ஒருங்கிணைப்பு செய்யும், ஒழுங்கு படுத்தி வழிகாட்டும் அடுத்த கட்ட வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.