இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அனைத்து அமைச்சுக்களும் ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீதத்தை குறைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திறைசேரி இந்த வருடம் எதிர்பார்த்ததை விட மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்ததாகவும், அந்த நிலையை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஜனவரியில் சமுர்த்தி கொடுப்பனவு வழங்குவதும் ஓரிரு வாரங்கள் தாமதமாகலாம் எனவும் குறிப்பிட்டார்.