அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவ கூட்டமைப்பில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி 24-ம் திகதி போரை தொடங்கியது.
அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் வழங்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் இராணுவம் தொடர்ந்து ரஷ்ய படைகளை எதிர்த்து துணிவுடன் சண்டையிட்டு வருகிறது.
இந்த நிலையில் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்யவுள்ளதையொட்டி ரஷ்யா தாக்குதல்களை தீவிரப்படுத்த தொடங்கியது.
அந்த வகையில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட அந்த நாட்டின் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்ய படைகள் நேற்று குண்டு மழை பொழிந்தன.
குறிப்பாக லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் மாகாணங்களில் போர் விமானங்கள் மற்றும் வெடி குண்டு டிரோன்கள் மூலம் ரஷ்யா சரமாரி தாக்குதல் நடத்தியது.
அதேபோல் தலைநகர் கீவ், நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ் ஆகிய நகரங்களில் தாக்குதல்கள் தீவிரமாக இருந்தன.
அங்கு குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பொது உட் கட்டமைப்புகளை குறிவைத்து சரமாரியாக ஏவுகணைகள் வீசப்பட்டன.
ஜபோரிஜியா நகர சபையின் செயலாளர் அனடோலி குர்டீவ், ஒரு மணி நேரத்தில் நகரம் 17 முறை தாக்கப்பட்டதாக கூறினார்.
போர் தொடங்கியதற்கு பிறகு இது மிகவும் தீவிரமான தாக்குதல்களின் காலகட்டமாக அமைந்ததாக அவர் தெரிவித்தார்.