புத்தளம் காதி மீது தாக்குதல்!

Date:

மார்ச் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட 55 காதிநீதிபதிகளில் புத்தளம் மற்றும் சிலாபம் பகுதிக்கென நியமிக்கப்பட்ட காதிநீதிபதி கலாநிதி எம்.ஆர். முஹம்மத் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர்  பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அவருடைய மருமகன் உள்ளிட்ட கூட்டத்தினர் தம்மீது தாக்குதல் நடத்தியதாக கலாநிதி எம். ஆர். முஹம்மத் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொருத்தமற்ற ஒருவர் காதிநீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த இடத்துக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்கும்படியும் வேண்டி புத்தளம் பெரிய பள்ளிவாசலினால் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவும் தனது பணியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஒத்துழைப்பை வேண்டியும் தாம் பா.உ. அலி சப்ரியைச் சந்திக்கச் சென்றதாகவும், அவ்வேளை தனது தகைமைகள் தொடர்பில் அவர் அநாவசியமான கேள்விகளைக் கேட்டதாகவும் இதனால் தான் அவற்றை மறுத்து உரத்த குரலில் பேசியதாகவும் காதிநீதிபதி எம். ஆர். முஹம்மத்  ‘NewsNow’ விடம் தெரிவித்தார்.

இதன்போது ஆவேசமடைந்த பா.உ. அலிசப்ரி அவர்களும் அவருடைய கூட்டத்தினரும் தன்னைத் தாக்கியதாகவும் தான் இரத்தம் வடிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் அவர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ததாகவும் மேலும் குறிப்பிட்டார்.

புத்தளம் மற்றும் சிலாபம் பிரதேசத்துக்கான காதி நீதிபதியாக கலாநிதி எம்.ஆர். முஹம்மத் நியமிக்கப்பட்டதையிட்டு புத்தளம் பெரிய பள்ளிவாசல் அவருக்கு வரவேற்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில் புத்தளம் பெரிய பள்ளிவாசல் தகுதியான ஒருவரை காதியாக நியமிக்க ஆவன செய்யும்படி பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமுக்கு அனுப்பியதாகச் சொல்லப்படும் கடிதம் தொடர்பில் நாம் புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாக அதிகாரி மௌலவி நஸ்ருத்தீன் அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,

வேறு மாகாணம் ஒன்றிலிருந்து வந்து குடியேறியவர் என்ற வகையில் மக்களால் பெரிதும் அறியப்படாதவராக அவர் இருந்ததாலும் இதனால் அவரைப் பற்றி முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை விசாரித்துத் தெளிவு பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்பட்டதாலும் மக்களால் அறியப்பட்ட மக்களால் சான்றுபகரக் கூடிய ஒருவரை நியமிக்க ஆவன செய்யுமாறு தற்போதைய காதி பதவியேற்கு முன்னர் பள்ளிவாசலால் அலிசப்ரி ரஹீமுக்கு கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால் அவர் பதவியேற்றதன் பின்னர் அவருடன் இணைந்து செயற்படுவதற்கு பள்ளிவாசல் முன்வந்ததாகவும் கடந்த காலங்களைப் போலவே காதிநீதிமன்றத்தின் நிலையச் செலவுகளை தொடர்ந்தும் பள்ளிவாசல் பொறுப்பேற்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் இந்தத் தாக்குதலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்தார்.

தனது வீட்டுக்கு தன்னைச் சந்திக்க அவர் வந்ததாகவும் அங்கு வாக்குவாதப்பட்டு அவர் வெளியேறியதாகவும் அவர் NewsNow இடம் தெரிவித்தார்.

இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை நீதிமன்றம் மேற்கொள்ளும் எனவும் ‘NewsNow’ இடம் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

இதேவேளை குறித்த காதிநீதிபதி தொடர்பிலான நல்லபிப்பிராயம் தொடர்பில்  மக்கள் மத்தியில் பரவலான விமர்சனங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்ட போதும் இது தொடர்பில் தமக்கு எந்த வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என நீதிச் சேவைகள் ஆணைக்குழு வட்டாரங்களில் இருந்து அறியக் கிடைக்கின்றது.

Popular

More like this
Related

60 நாள் காசா போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்ட ஹமாஸ்..!

பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக 60 நாள் போர் நிறுத்த பரிந்துரை முன்மொழியப்பட்டது. இந்த...

கேம்பிரிட்ஜ் அகராதியில் GenZ, Gen Alpha தலைமுறைகள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் இணைப்பு!

கேம்ப்ரிட்ஜ் அகராதி கடந்த ஒரு ஆண்டில் 6,000-க்கும் மேற்பட்ட புதிய சொற்களையும்,...

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...