துருக்கி ஜனாதிபதி தேர்தல்:  இன்று பிளவுபட்ட தேசமாக மாறியுள்ள துருக்கி (லத்தீப் பாரூக்)

Date:

அண்மையில் முடிவுற்ற துருக்கியின் ஜனாதிபதி தேர்தலில் ரசப் தையிப் எர்டொகன் 52 சதவீதமான வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளார்.

இந்த தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து வெளியிட்டுள்ள எர்டொகன் “இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் துருக்கியின் 85 மில்லியன் மக்களே” என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் மக்கள் மிக ஆழமாக பிளவுபடுத்தப்பட்டுள்ள இந்த நாட்டின் தேர்தலில் கிட்டத்தட்ட அரைவாசி வீதமான முடிவு எர்டொகனின் சர்வாதிகாரமயமாக்கல் தூரநோக்கை ஏற்றுக் கொள்வதாக அமையவில்லை.

இவ்வாறாக இன்று துருக்கி ஒரு பிளவுபட்ட தேசமாக உள்ளது. எர்டொகனை எதிர்த்துப் போட்டியிட்ட கேமல் கிளிச்டாரொக்லு “நடைபெற்று முடிந்த தேர்தல் நியாயமானதாக அமையவில்லை.

அண்மைக் காலங்களில் நடந்த மிகவும் நியாயமற்ற தேர்தல் இதுதான்” என்று பிரகடனம் செய்தவுடன், ஐக்கியத்துக்காக எர்டொகன் எழுப்பிய குரலும் வெறுமையாகி விட்டது. ஜனாதிபதியின் அரசியல் கட்சி தனக்கு எதிராக எல்லா அரச வளங்களையும் முடுக்கி விட்டதாகவும் கிளிச்டாரொக்லு குற்றம் சாட்டியுள்ளார். அது மட்டும் அன்றி அவர் தேர்தல் தோல்வியை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவும் இல்லை.

ஊடகங்களில் பாரபட்சம், கருத்துச் சுதந்திரத்துக்கு எல்லைகள் விதிக்கப்பட்டமை என்பன சமநிலை அற்ற ஒரு போட்டி மைதானத்தை உருவாக்கியதாகவும், எர்டொகனுக்கு நியாயப்படுத்த முடியாத அளவு நலன்களுக்கு அவை பங்களிப்புச் செய்ததாகவும் சர்வதேச கண்கானிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வெற்றிக்களிப்பில் எர்டொகன் ஆதரவாளர்கள்

அங்காராவில் உள்ள தனது கட்சி தலைமையகத்தில் உரை நிகழ்த்திய எதிர்க்கட்சி வேட்பாளர் துருக்கியில் உண்மையான ஜனநாயகம் ஏற்படும் வரை தான் தொடர்ந்து போராடப் போவதாகத் தெரிவித்துள்ளார். “எமது வரலாற்றில் இதுவே மிகவும் நியாயமற்ற தேர்தல். அச்சம் மிக்க சூழ்நிலைக்கு நாம் அடிபணியவில்லை. எல்லா வகையான நெருக்குதல்களையும் மீறி நாட்டின் சர்வாதிகாரப் போக்கு அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற மக்களின் உறுதி தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.

துருக்கியில் ஜனநாயத்துக்கான கடைசி வாய்ப்பாக இந்தத் தேர்தலை எதிர்க்கட்சி வர்ணித்திருந்தது. எர்டொகன் தனது 20 வருட கால ஆட்சியில் நாட்டின் ஜனநாயக நிறுவனங்களை வெறுமையாக்கி உள்ளதாகவும், நீதித்துறையின் அதிகாரம் அரிப்புக்கு ஆளாகி உள்ளது. எதிர்ப்பாளர்கள் நசுக்கப்படுகின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

துருக்கியின் தள்ளாடும் பொருளாதாரமும், பெப்ரவரியில் இடம்பெற்ற பூகம்பத்துக்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் எர்டொகனுக்கு பெரும் தலையிடியாக மாறி உள்ளன. மீட்பு பணிகளில்; இழைக்கப்பட்ட தவறுகளை அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. அதற்காக மக்களிடம் மன்னிப்பும் கோரி உள்ளது.

“மாற்றத்தை வேண்டி நின்றவர்களுக்கு இது ஒரு மோசமான தோல்வி அல்ல” என்று புறூகிங்ஸ் நிறுவனத்தின் வருகை தரும் விரிவுரையாளர் அஸ்லி அயிடின்டாஸ்பாஸ் சிஎன்என் இன் பெகி அன்டர்ஸனுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் செதாம் ஹவுஸ் சிந்தனை வட்டத்தின் இணை உறுப்பினர் கலிப் தலாய் “துருக்கியில் எர்டொகனின் மூன்றாவதும் இறுதியுமான ஆட்சிக் காலம் இன்றைய நிலையைப் போன்றே தொடரும். 2003ல் முதல் தடவையாக பிரதமராகப் பதவிக்கு வந்த எர்டொகனின் ஆட்சியில் (2014ல் ஜனாதிபதியாக வருவதற்கு முன் 11 வருடங்கள் இந்தப் பதவியில் இருந்துள்ளார்) துருக்கி சர்வாதிகாரத்தை நோக்கி பின்வாங்கி உள்ளது.

இன்னும் எஞ்சியுள்ள ஐந்தாண்டு காலத்தில் ஜனநாயக நிகழ்ச்சி நிரலை நோக்கி நாட்டை திசை திருப்பும் முயற்சிகளை எர்டொகன் மேற்கொள்வது அசாத்தியமே. அதை விட தனது திட்டத்தை நோக்கி அவர் மேலும் நகருவதே சாத்தியமாகும்” என்று தெரிவித்துள்ளார்.

“சர்வாதிகாரிகள் ஸ்திரமற்ற ஜனநாயக பின்னணியை சந்திக்கின்ற போது அவர்கள் அடக்குமுறையை இரட்டிப்பாக்குவர்” என்று எர்டொகன் யுத்தம் : உள்நாட்டிலும் சிரியாவிலும் ஒரு உறுதியான மனிதனின் போராட்டம்” என்ற நூலை எழுதி உள்ள கோனுல் டொல் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

எர்டொகனின் வெற்றி தொடர்பான பின் விளைவுகள் துருக்கிக்குள் மட்டும் அடங்கிக் கிடப்பதல்ல. அது பெரிய அளவில் சர்வதேச விளைவுகளையும் கொண்டது. அது நேட்டோவில் மட்டும் அல்ல. ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் துருக்கி இறங்கி உள்ளது.

ரஷ்யா உக்ரேனில் மேற்கொண்டுள்ள முழு அளவிலான ஆக்கிரமிப்பு யுத்தத்தை அடுத்து பல நாடுகள் அதைற்கு தடைகளை விதித்துள்ள பின்னணியிலேயே துருக்கி உறவுகளை நாடி உள்ளது. துருக்கி தொடர்ந்தும் மஸ்கோவுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் என்றே கருத வேண்டி உள்ளது.

சிஎன்என் செய்திச் சேவைக்கு எர்டொகன் அண்மையில் வழங்கியுள்ள ஒரு பேட்டியில் ரஷ்ய ஜனாதிபதி புடின் உடனான தனது விஷேட நல்லுறவுகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சுவீடன் நேட்டோவுடன் இணைவதை தனித்து நின்று எதிர்த்த துருக்கியின் நிலைப்பாட்டையும் அவர் மீள் உறுதி செய்துள்ளார். முன்னர் துருக்கி பின்லாந்தும் சுவீடனும் நேட்டோ இராணுவ கூட்டணியில் இணைவதை எதிர்த்தது. குர்டிஷ் கெரில்லாக்களுக்கு அவை ஆதரவு வழங்குவதாகக் காரணம் கூறியே இந்த எதிர்ப்பு காட்டப்பட்டது.

குர்திஷ் கெரில்லாக்களை துருக்கியும் அமெரிக்காவும் பயங்கரவாத அமைப்பாகப் பார்க்கின்றன. பின்னர் பின்லாந்து மீதான எதிர்ப்பை துருக்கி நீக்கிக் கொண்டது. அதன் பிறகு நேட்டோவின் 31வது அங்கத்துவ நாடாக பின்லாந்து இணைந்து கொண்டது. ஆனால் சுவீடன் மீதான துருக்கியின்; வீட்டோ எதிர்ப்பு இன்னமும் தொடருகின்றது.

2022 பெப்ரவரியில் ரஷ்யா உக்ரேன் மீது ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடங்கியது முதல் துருக்கியின் இந்த உறுதியான மனிதன் முக்கியமான அதிகார தரகராகவும் மாறி உள்ளார். இரு தரப்புக்கும் இடையில் முக்கியமானதோர் சமநிலையை அவர் பேணி வருகின்றார். இதுவே ‘உக்ரேன் சார்பு நடுநிலை’ என பரவலாகப் பேசப்படுகின்றது.

மேலும் ‘கருங்கடல் தானிய வழித்தட முன்முயற்சி’ என்ற உடன்பாட்டுக்கும் அவர் மத்தியஸ்தராகப் பணியாற்றி உள்ளார். ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பு காரணமாக சிக்கிக் கொண்ட மில்லியன் கணக்கான தொன் தானியங்களை விடுவிக்க இது உதவியது. இதனால் உலகளாவிய ரீதியில் பட்டினி நெருக்கடி ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. அண்மையில் இந்த உடன்படிக்கை காலாவதியாக ஒரு தினத்துக்கு முன் மேலும் இரு மாத காலங்களுக்கு இந்த உடன்படிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி டுவிட்டர் பதிவொன்றின் மூலம் எர்டொகனின் வெற்றியைப் பாராட்டி உள்ளார். “எமது தேசங்களின் நலன்களுக்காகவும் அதேபோல் ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திர நிலை என்பனவற்றுக்காகவும் மூலோபாய பங்குடைமைகளை மேலும் வலுவாக்கும் விடயத்தில் நாம் ஈடுபட்டுள்ளோம்” என்று அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு எர்டொகன் – புடின் உறவுகள் மேலும் வலுவடைவதை நாம் காண முடியும். மேற்குலகில் இருந்து சலுகைகளைப் பெற்றுக் கொள்ள சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைந்து கொள்ளும் விடயத்தை ஒரு துருப்புச் சீட்டாக அவர் பயன்படுத்தி உள்ளார். மேலும் அவரது கைவசம் இன்னும் பல அம்சங்களும் உள்ளன. அவை எல்லாவற்றில் இருந்தும் அவர் மேலும் பயனடைய முயல்கிறார்.

சுவீடனின் நேட்டோ அங்கத்துவத்தை எர்டொகன் ஒப்புக் கொள்வார் என்பதே பல ஆய்வாளர்களின் மதிப்பீடாக உள்ளது. ஜுலையில் இடம்பெறவுள்ள அடுத்த நேட்டோ உச்சி மாநாட்டுக்கு முன்னர் அல்லது பெரும்பாலும் இந்த ஆண்டுக்குள் இது நடக்கலாம் என்பதே ஆய்வாளர்களின் கணிப்பு. நேட்டோவில் துருக்கியின் இருப்பை எர்டொகன் பெருமையாகப் பேசுகின்றார்.

காரணம் சர்வதேச விவகாரங்களில் அது தனது செல்வாக்கை மேலோங்கச் செய்யும் என்று அவர் நம்புகின்றார். உண்மையில் ரஷ்யாவுக்கும் மேற்குலகுக்கும் இடையில் பெறுமதி மிக்க ஒரு இராஜதந்திர தரகராக துருக்கியை நிலைநிறுத்துவதே அவரின் முயற்சியாகும். அந்த வகையில் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் சமாதான பேச்சுக்களையும் அவர் தூண்டி வருகின்றார்.

யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரண்டு நாடுகளையும் கடந்த ஆண்டில் தானிய ஏற்றுமதி விடயத்தில் இணங்க வைத்தது போல் இதுவும் சாத்தியமாகும் என்று அவர் நம்புகின்றார்.

எர்டொகனின் வெற்றி துருக்கியில் தஞ்சம் புகுந்துள்ள சுமார் 3.6 மில்லியன் சிரியா மக்களின் வாழ்க்கையிலும் தீர்க்கமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும். தேர்தல் பிரசாரங்களின் போது எதிர்க்கட்சி வேட்பாளர் சகல அகதிகளும் துருக்கியில் இருந்து வெளியேற்றப்படுவர் என்று அறிவித்ததைப் போல் எர்டொகன் கூறவில்லை.

முதல் சுற்று தேர்தல் முடிவடைந்ததும் தேசியவாதிகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் எதிர்க்கட்சி வேட்பாளர் இந்த விடயத்தில் சற்று தீவிரம் காட்டினார்.

ஆனால் சிரியாவின் வட பகுதியில் பல நூற்றுக் கணக்கான வீடுகள் இப்போது கட்டப்பட்டுக் கொண்டு இருப்பதால் அகதிகள் தாமாகவே துருக்கியில் இருந்து வெளியேறி விடும் வாய்ப்பு அதிகம் எனக் கருதி எர்டொகன் இந்த விடயத்தில் சற்று அமைதி காத்தார்.

மேலும் சர்வாதிகாரம் மிக்க ஒரு துருக்கியை எதிர்கொள்ள மேற்குலகம் தயாரா? அல்லது இந்த பரிவர்த்தனை உறவை இப்படியே பேணி சிரியா அகதிகளை துருக்கியில் வைத்துக் கொள்ளுகின்ற வரைக்கும் எர்டொகனுடன் இணைந்து பணியாற்ற எங்களால் முடியும். அவரை சகித்துக் கொள்ளவும் எங்களால் முடியும் என தமக்குத் தாமே ஆறுதல் கூறி சமாளித்துக் கொள்வார்களா?

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...