மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடி பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நம் நாட்டின் மூத்த ஆலிம்களில் ஒருவரான ஆதம் லெப்பே ஹஸ்ரத் என்றழைக்கப்படக்கூடிய அஷ்ஷைக் பி.எம். ஹனீபா அவர்களின் மரணச் செய்தி எம்மை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. பல மார்க்கம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த அன்னார் தனது 78 ஆவது வயதில் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அவர்கள் காத்தான்குடி பிரதேசத்தில் அமைந்துள்ள ஜாமிஅத்துல் ஃபலாஹ் அரபுக் கல்லூரியின் நீண்ட கால உப தலைவரும், காத்தான்குடி ஸபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவரும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா காத்தான்குடி பிரதேசக் கிளையின் மூத்த ஆலோசகருமாவார்கள்.
ஜம்இய்யாவின் காத்தான்குடி பிரதேசக் கிளை ஊடாக இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையை பாதுகாப்பதில் அன்னாரின் பங்களிப்பு மறக்க முடியாததாகும். அன்னார் மூத்த தஃவாப் பணியாளரும், அகில இலங்கை தப்லீஃ ஜமாஅத்தின் சூரா உறுப்பினருமாவார்கள். மார்க்கப் பணி, தஃவாப் பணி மற்றும் சமூகப் பணிகளில் முன்னின்று செயலாற்றிய அன்னார் பல தசாப்த காலமாக சமூகத்துகக்காக அயராது பாடுபட்டவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வேளையில் அன்னாருடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மாணவர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிறைவேற்றுக் குழு மற்றும் நியூஸ் நவ் குழுமம் மற்றும் அனைத்து உலமாக்கள் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அல்லாஹுதஆலா அன்னாரது நல்லமல்களை அங்கீகரித்து, அவர்களை பரிசுத்தப்படுத்தி, நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவானாக.
(யா அல்லாஹ்! அவருக்காக செய்யப்பட்ட நன்மைகளின் கூலியை எங்களுக்கு தடுத்துவிடாதே. அவருக்குப் பின்னர் எங்களை குழப்பத்தில் ஆழ்த்திவிடாதே. எம்மையும், அவரையும் மன்னித்தருள்வாயாக.)
முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
அஷ்ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம்
பதில் பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா