வியட்நாம்- இலங்கைக்கு இடையிலான பொருளாதார உறவுகளை பலப்படுத்துவதும் மற்றும் விமான சேவைகளை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் வியட்நாம் பிரதி பிரதமர் லூ குவாங்க்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான இலங்கையின் உயர்மட்ட குழு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள குன்மிங்கில் நடைபெற்றுவரும் 7வது சீனா-தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சியில் பங்குபற்ற சென்றுள்ளனர்.
இந்த விஜயத்தில் பிரதமர் சீனாவின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதுடன், வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்பின் ஒரு அங்கமாக வியட்நாம் பிரதி பிரதமரை சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் இருதரப்பு பொருளாதார, கலாசார மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
பொது மற்றும் தனியார் துறைகளில் தற்போதுள்ள கூட்டு முயற்சிகளுக்கு மேலதிகமாக புதிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளின் சாத்தியக்கூறுகளை இலங்கை ஆராய வேண்டும் என வியட்நாம் பிரிதி பிரதமர் கோரிக்கை விடுத்ததுடன், வியட்நாம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், தொழில் வல்லுநர்கள் மற்றும் திறமையான இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் உறுதியளித்தார்.
விவசாயத்தில் ஏற்றுமதி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து வியட்நாம் பிரதிப் பிரதமருடன் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துரையாடியதுடன், இறப்பர், தேங்காய், தேயிலை, மீன்பிடி, எரிசக்தி மற்றும் சுரங்கப் பணிகள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.