சனியன்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாலைதீவு முற்போக்கு முன்னணி வேட்பாளர் கலாநிதி முஹம்மத் முஈஸின் வேண்டுகோளைத் தொடர்ந்து மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீனின் சிறைவாசம் வீட்டுக் காவலாகக் குறைக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னரே ஊழல் மற்றும் பணச் சலவைக் குற்றம் சாட்டப்பட்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீன், தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் ஸாலிஹின் ஆட்சியில் 11 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையிலிருந்தே அவர் தேர்தலில் வேட்பாளராக விண்ணப்பித்த போதும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த கலாநிதி முஈஸ் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டார்.
தேர்தலில் அவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து யமீனின் சிறைவாசத்தை வீட்டுக் காவலாக மாற்றினார்.
யமீனின் வீட்டுக் காவல் தற்காலிகமானது எனத் தெரிவிக்கும் மாலைதீவு ஊடகங்கள் யமீன் மீதான நீதிமன்ற விசாரணைகள் இன்னும் நிலுவையில் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளன.