இஸ்ரேல் – பலஸ்தீன மோதல் காரணமாக வீசா காலாவதியானதன் பின்னரும் நாடு திரும்ப முடியாத நிலையில் நிர்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை பணியாளர்களின் விசாக்களை புதுப்பிக்க இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது.
குறித்த இலங்கையர்களுக்கு விவசாயத்துறையில் வேலை வழங்குவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
போர்ச் சூழல் காரணமாக விவசாயத்துறையில் உணவு உற்பத்தி, சேமிப்பு மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய வேலைவாய்ப்புகள் அதிகளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வீசா இல்லாத தாதியர்கள் மற்றும் ஏனைய துறைசார் இலங்கையர்களுக்கும் விசா வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இன்று (24) மற்றும் நாளை (25) ஆகிய இரு தினங்களில் தகவல் சேகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், வீசா இன்றி தற்போது இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தகவல் வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது கடவுச்சீட்டின் பிரதியை தூதரகத்தில் சமர்ப்பித்து பதிவு செய்யுமாறும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார வலியுறுத்தியுள்ளார்.