வெளிநாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் ரூ. ஒரு கோடி 91 இலட்சத்துக்கும் அதிக பணம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய தணிக்கை அலுவலகம் நடத்திய விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
முன்னாள் இரத்தினபுரி மாவட்ட சபை உறுப்பினர் ரஞ்சித் சொய்சா மற்றும் தற்போதைய பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நியமிக்கப்பட்ட ஜயந்த வீரசிங்க ஆகியோருக்கு இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா காலமான நிலையில் அவருக்காக செலுத்தப்பட்ட தொகை ஒரு கோடியே 21 இலட்சத்து 60,000 ரூபாய் ஆகும்.
கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் இரண்டு தவணையாக இந்தத் தொகை செலுத்தப்பட்டது.
ஜயந்த வீரசிங்க அமைச்சருக்கு வழங்கப்பட்ட தொகை 69 இலட்சத்து 55,000ரூபாய் ஆகும்.
இதற்கிடையில், கடந்த ஆண்டு, இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய், மூளை தொடர்பான நோய்கள், முழங்கால் மற்றும் இடுப்பு தொடர்பான நோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் இதர சிகிச்சைகளுக்கு 5,101 நோயாளிகள் வைத்திய உதவி கோரிய நிலையில் 2750 நோயாளிகளுக்கு மட்டுமே பணம் வழங்கப்பட்டதாக தேசிய தணிக்கை அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், இது 54 வீதம் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இது தொடர்பாக தேசிய தணிக்கை அலுவலகம் நடத்திய விசாரணைக்கு நிர்வாகம் எந்த பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.