நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்றும் (02) எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகளவான கனமழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்குண்டு மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர்களில் ஏழுவயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர 78 மற்றும் 36 வயதான இருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், கம்பஹா – பல்லேவல – தெய்யந்தர பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்றிரவு (01) மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.