தமது பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வைக் கோரி நாளை (02) பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளன.
ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தப் போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதன்படி, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கறுப்புக்கொடி மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொழிற்சங்க நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர், பெற்றோர்கள் நிலைமையை புரிந்து கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (05) அனைத்து அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்து அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒடுக்கும் வழிமுறைகளை கண்டிப்பதாகவும், என்ன நடந்தாலும் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடருமெனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.