NEWSNOW – காசா படுகொலையை கண்டித்து அமெரிக்க துணை தூதரக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரியை பொலிஸார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்கா தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில், மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.
காசாவில் நடத்தப்படும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு துணை போகும் அமெரிக்க அரசை கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது.
அப்போது மேடையில் பேசிய அவர், “காசாவில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
அங்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் குழந்தைகளும், பெண்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இஸ்ரேலை எதிர்க்கும் அதே நேரத்தில், அதற்கு துணை போகும் அமெரிக்காவையும் எதிர்த்து கண்டனங்களை எழுப்பி வருகிறோம்” எனப் பேசினார்.
இதனைத்தொடர்ந்து அமெரிக்கா துணை தூதரகத்தை முற்றுகையிட சென்ற மனிதநேய ஜனநாயக கட்சியினரை வழியிலேயே தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தி, பொலிஸார் கைது செய்தனர். அப்போது அக்கட்சியின் மாநிலத் தலைவரான தமிமுன் அன்சாரியையும் கைது செய்தனர்.


போராட்டத்தில் தலைவர்களும்,முதல் நிலை நிர்வாகிகளும் பலஸ்தீன துண்டை அணிந்து தங்களுடைய உணர்வை வெளிப்படுத்தியதுடன் தாம்பரம் – பல்லாவரம் கிளைகளைச் சேர்ந்த மஜக இளைஞர்கள் பலஸ்தீன ஆதரவு டி-ஷர்ட் அணிந்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மத்திய சென்னை மேற்கு மாவட்டம் சார்பாக பெண்கள் காஸாவில் கொல்லப்படும் குழந்தைகளை நினைவூட்டும் விதத்தில், கைகளில் வெள்ளைத்துணி கட்டப்பட்ட பொம்மைகளோடு அணிவகுத்தனர்.