நீரில் மூழ்கி பலியான மத்ரஸா மாணவர்கள்: அதிபர், ஆசிரியருக்கு மறியல்

Date:

கைது செய்யப்பட்ட நிந்தவூர் அரபு மத்ரஸாவின் அதிபர் மற்றும் ஆசிரியரை டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் ஏனைய 2 பேரை ஒரு இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்குமாறும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாறை – காரைதீவு, மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி தலைமையில்  விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நிந்தவூர் மத்ரஸா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரும் வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின்னர், சம்மாந்துறை  நீதிமன்ற பதில் நீதவான் எம்.ரி.சபீர் அகமட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது மத்ரஸாவின் அதிபரையும் ஆசிரியரையும் எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய 2 உதவியாளர்களை தலா 1 இலட்சம் ரூபாய் வீதம் சரீரப் பிணையில் விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (26) நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி மத்ரஸா முடிந்ததும் இந்த மாணவர்களுக்கு வீட்டுக்குச் செல்ல பேருந்து இல்லாத காரணத்தினால் அம்மாணவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதுடன் நிர்வாகம் மெத்தனப் போக்குடன் நடந்துகொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், மாணவர்கள் பயணம் செய்த வீதி ஆபத்தானது என்பதால் உழவு இயந்திரத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்ல வேண்டாம் என இராணுவத்தினர் அறிவுறுத்தியிருந்தமை மேலும் தெரியவந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் 11 மாணவர்களுடன் சென்ற உழவு இயந்திரம் நீரோட்டத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிர் பிழைத்த நிலையில், மேலும் 6 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.

12 – 16 வயதுக்குட்பட்ட 6 மாணவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், இதுவரை 5 மாணவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, மேலும் ஒரு மாணவனை தேடும் பணிகள் தற்போது  நடைபெற்று வருகின்றன.

இதேவேளை, நேற்று உழவு இயந்திர சாரதி, மற்றுமொருவர் என இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இருள் சூழ்ந்த நிலை மற்றும் அதிகமான காற்று காரணமாக காணாமல்போன மாணவனை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் நாளை சனிக்கிழமை (30) காலை மீட்புப் பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

மேலும், நாளை கல்முனை – அம்பாறை பிரதான வீதியில் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டால் மாத்திரம் வழமை போன்று அனைத்து வாகனங்களும் அவ்வீதியில் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...