நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றிருந்த நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டி தொடங்குமுன் மழை பெய்த காரணத்தால் நாணயச்சுழற்சி தாமதமானது.
மழை நின்ற பின் தொடங்கிய 37 ஓவர்களாக குறைப்பட்டு நாணயச்சுழற்சி நடைபெற்றது. அதன்படி இப்போட்டியில் நாணயச்சுழற்சி வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வில் யங் 16 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் மார்க் சாப்மேன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், 100 ஓட்டங்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்தனர். அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் மார்க் சாப்மேன் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திராவும் 79 ஓட்டங்களில்விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய டேரில் மிட்செல் ஒருபக்கம் நிதானமாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய டாம் லேதம் ஒரு ஓட்டங்களிலும், கிளென் பிலீப்ஸ் 22 ஓட்டங்களிலும், கேப்டன் மிட்செல் சான்ட்னர் 20 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேரில் மிட்செல் 38 ஓட்டங்களை மட்டுமே எடுத்த கையோடு நடையைக் கட்ட, மற்ற வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 37 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ஓட்டங்களை சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மதீஷ தீக்ஷன ஹாட்ரிக் விக்கெட்டுகளுடன் 4 விக்கெட்டுகளையும், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 256 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் பெதும் நிஸ்ஸங்க ஒரு ஓட்டங்களிலும், குசல் மெண்டிஸ் 2 ஓட்டங்களிலும், அவிஷ்க பெனாண்டோ 10 ஓட்டங்களிலும், சரித் அசலங்க 4 ஓட்டங்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இலங்கை அணி 22 ஓட்டங்களிலே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த கமிந்து மெண்டிஸ் – ஜனித் லியானகே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் கமிந்து மெண்டிஸ் அரைசதம் கடக்க, அவருடன் இணைந்து விளையாடிய லியானகே 22 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய சமிந்து விக்ரமசிங்க 11 ஓட்டங்களுக்கும், வனிந்து ஹசரங்க ஒரு ஓட்டங்களிலும் என விக்கெட்டை இழக்க, அரைசதம் கடந்து விளையாடி வந்த கமிந்து மெண்டிஸூம் 64 ஓட்டங்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் இலங்கை அணி 30.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓரூக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.