இஸ்ரேலை கடுமையாக சாடிய துருக்கிய ஜனாதிபதி: 18 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர்கள் பங்கேற்கும் மாநாட்டில் உரை

Date:

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத இராணுவத் தாக்குதல்களை துருக்கி ஜனாதிபதி ரசப் தயிப் அர்தூகான் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

அதேவேளை இஸ்ரேலிய அரசாங்கம் பலஸ்தீனியர்களுக்கு எதிராக கண்மூடித்தனமான படுகொலைகளைச் செய்வதாகக் குற்றம் சாட்டியதுடன் சர்வதேச சமூகத்தின் மௌனத்தையும் அவர் விமர்சித்தார்.

பலஸ்தீனத்தை ஆதரிக்கும் வகையில் 18 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற சபாநாயகர்கள் பங்கேற்ற மாநாடு துருக்கி ஜனாதிபதி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இஸ்தான்புல்லில் தொடங்கியது.

இந்த மாநாட்டில் பேசும் போதே துருக்கி ஜனாதிபதி இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.

முற்றிலும் பைத்தியக்காரத்தனமான நிலையில், இஸ்ரேல் அரசு பலஸ்தீனர்களை வேறுபாடின்றி வெட்டிக் கொன்று வருவதாகக் கூறிய அர்தூகான் பெண்கள், குழந்தைகள், மருத்துவர்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உதவி ஊழியர்கள் ஆகியோர் கொல்லப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

“பலஸ்தீனம் என்பது பல நாகரிகங்களின் பூர்வீகம் மட்டுமல்ல, பல தீர்க்கதரிசிகள் வாழ்ந்த புனித நிலமும் கூட . இன்றைய இந்த ஒன்றிப்பாடு நிலம், மக்கள் ஆகியவற்றுக்கான ஆதரவை மட்டுமல்ல, நீதி, அமைதி மற்றும் எதிர்ப்புக்கான முழக்கமாகும்,” என்றார்.

இம் மாநாடும் அதில் எடுக்கப்படும் முடிவுகளும் பலஸ்தீனத்துக்குப் பலன் தரும் என நம்பிக்கை தெரிவித்த அர்தூகான், பலஸ்தீனப் பிரச்சினையை தங்களுடையதாகக் கருதும் நாடாளுமன்ற சபாநாயகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

“இந்தமாநாடு ஒரு இனத்துக்கானது மட்டுமல்ல  மனிதநேயத்தை பாதுகாக்க ஒரு போராட்டமாகும்.  இது அரசியல் இல்லாமல் மனிதாபிமான போராட்டம்,” என்றார்.

இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனசாட்சி உள்ள ஒவ்வொருவருக்கும் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயம். இந்த நோக்கம் அரசியலுக்கு அப்பாற்பட்டது.

பல மாதங்களாக, பத்திரிகையாளர்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டபோது, ​​”உலகளாவிய ஊடகங்களும் மனித உரிமை ஆதரவாளர்களும் அமைதியாக இருந்து வருகின்றனர்”

“காசாவில் வாழும் மக்களில் 7% பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்துள்ளனர். 212 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள் மருந்தும், நீரும், உணவுமின்றி உயிரிழந்துள்ளனர், மருந்து, தண்ணீர் மற்றும் உணவு இல்லாததால் நம் கண் முன்னே குழந்தைகள் இறந்தனர்.

“பலஸ்தீன குழந்தைகளைக் கொன்று தங்கள் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடும் அளவுக்கு மனிதாபிமானமற்ற ஒரு ஆயுதகுழுவை நாம் எதிர்கொள்கிறோம்.

பள்ளிகள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் குண்டுவீசித் தாக்கப்பட்டன. காசாவில் கிட்டத்தட்ட 80% கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

ஒரு கல் கூட நிற்க முடியாத அளவுக்கு காசா அழிக்கப்பட்டுள்ளது. 50 மில்லியன் டன் மண்ணுக்கீழ் புதையுண்ட நகர் குவியலாக மட்டுமே இன்று காசா உள்ளது,” என்றார்.

மேலும் அக்டோபர் 7, 2023 முதல் கிட்டத்தட்ட 60,000 பலஸ்தீனியர்கள் “கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள், மேலும் “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பலஸ்தீனியர்களை அவர்கள் வாழ்ந்து வரும் நிலத்திலிருந்து வெளியேற்ற முயற்சிக்கும் எந்தவொரு திட்டமும் செல்லாது என்று  எச்சரித்தார்.

“சிறிய சம்பவங்களில்கூடத் தண்டனை விதிக்கும் நாடுகள், இஸ்ரேலுக்கு எதிராக எங்கே? “சர்வதேச சட்டங்கள் எங்கே? மனித உரிமை சாசனம் எங்கே? பில்லியன் டாலர் பட்ஜெட்டில் இயங்கும் நிறுவனங்கள் எங்கே? BBC, CNN போன்ற ஊடகங்கள் எங்கே? குழந்தைகள் தீயில் கருகிக்கொண்டும், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுகின்ற நேரத்தில் உலகம் எங்கே?” என அர்தூகான் பல கேள்விகளை எழுப்பினார்.

“பலஸ்தீனரை தங்கள் மூவாயிரம் ஆண்டுகளாக வாழும் நிலத்திலிருந்து விரட்டும் எந்தத் திட்டத்தையும் எங்களால் ஏற்க இயலாது.

“காசா காசா மக்களுக்கு சொந்தமானது. பலஸ்தீனம் பலஸ்தீன மக்களுக்கு சொந்தமானது. மில்லியன் கணக்கான பலஸ்தீன அகதிகள் தங்கள் சாவியை வைத்திருக்கும் வீடுகளுக்குத் திரும்பக் காத்திருக்கும் நிலையில், புதிய இடம்பெயர்வுகள் அல்லது இடப்பெயர்வுகளை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது,என்று அவர் கூறினார்.

“எங்கள் பலஸ்தீன சகோதர சகோதரிகள் தங்கள் தாயகத்தில் சுதந்திரமாகவும், பிற மதங்களுடன் அமைதியாகவும் வாழ எங்களால் முடிந்த அனைத்து ஆதரவையும் வழங்குவோம். நாங்கள் தனிமையில் நின்றாலும், பலஸ்தீன காரணத்தைத் தொடர்ந்து பாதுகாப்போம்- என துருக்கிய ஜனாதிபதி அர்தூகான் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...