கன்னட எழுத்தாளரான பானு முஷ்டாக் எழுதிய ஹார்ட் லாம்ப் எனும் புத்தகம் இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது.
பானு முஷ்தாக் கன்னட மொழியில் எழுதிய இந்த நூலை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
லண்டனின் டேட் மாடர்னில் நடந்த விழாவில், ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவின் தலைவராக உள்ள எழுத்தாளர் மேக்ஸ் போர்ட்டர் இந்த விருதை அறிவித்தார்.
சிறுகதைகளின் தொகுப்புக்கு இந்த விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த பரிசை வென்ற முதல் இந்திய மொழிபெயர்ப்பாளர் தீபா பாஸ்தி ஆவார்.
அதேபோல இந்தப் பரிசு பெறும் ஆறாவது பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் ஆவார். 1990 மற்றும் 2023-க்கு இடையில் எழுதப்பட்ட கதைகளை உள்ளடக்கிய ‘ஹார்ட் லாம்ப்’, தென்னிந்தியாவில் முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களைச் சித்தரிக்கிறது.
சர்வதேச அளவில் இறுதிப் போட்டியில் இருந்த ஆறு புத்தகங்களிலிருந்து இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்புத்தகம் அதன் நகைச்சுவையான, துடிப்பான பேச்சு வழக்கு, நெகிழ்ச்சியான மற்றும் உற்சாகமான” கதை சொல்லலுக்காகப் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
பானு முஷ்டாக் யார்?
கர்நாடகாவில் ஹசன் நகரத்தில் 1948-ம் ஆண்டு பிறந்த பானு முஷ்டாக், ஒரு முஸ்லிம் பகுதியில் வளர்ந்தார், அங்கு அவர் ஆரம்பத்தில் குர்ஆனைப் படித்தார்.
எட்டு வயதில், அரசு ஊழியரான அவரது தந்தை, அவரை ஒரு சிவமொக்காவில் உள்ள கான்வென்ட் பள்ளியில் சேர்த்தார். அங்குப் பயிற்று மொழி கன்னடம் ஆகும்.
முஷ்டாக் இறுதியில் கன்னடத்தில் சரளமாகப் பேசத் தொடங்கினார், அது பின்னர் அவரது இலக்கிய வெளிப்பாட்டின் மொழியாக மாறியது.
பள்ளியில் படிக்கும்போதே எழுதத் தொடங்கினார். மேலும் அவர் உயர் கல்வியையும் தேர்வு செய்தார். அவரது படைப்பு வெளியிடப்படுவதற்குப் பல ஆண்டுகள் ஆனது. 26 வயதில் திருமணம் செய்த நிலையில், 27-வது வயதில் அவரது முதல் சிறுகதை உள்ளூர் பத்திரிகையில் வெளிவந்தது.
அவரது திருமண வாழ்க்கையின் ஆரம்ப ஆண்டுகள் உணர்ச்சிப் போராட்டத்தால் குறிக்கப்பட்டன. முஷ்டாக் பின்னர் ஒரு பிரபலமான உள்ளூர் பத்திரிகையின் நிருபராகப் பணியாற்றினார், சமூக அக்கறை கொண்ட கதைகளை விரிவுபடுத்தப் பத்திரிகையைப் பயன்படுத்தினார்.
பத்திரிகைத் துறையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, முஷ்டாக் சட்டத் தொழிலுக்கு மாறினார். 1981-ஆம் ஆண்டில் தனது மூன்றாவது மகள் பிறந்த பிறகு, பானு முஷ்டாக் மற்றொரு தீவிரமான நோயை அனுபவித்து மீண்டார்.
அந்த நேரத்தில், ஒரு சம்பவம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது: பிஜாப்பூரைச் சேர்ந்த ஒரு பெண் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை திரைப்படங்களுக்குச் சென்றதற்காக முஸ்லிம் இளைஞர் குழுவால் துன்புறுத்தப்பட்டார்.
பெண்கள் சினிமாவுக்குச் செல்லக் கூடாது என்று அந்தக் குழு ஒரு தார்மிகக் கட்டளையைப் பிறப்பித்தது. இந்த அநீதி முஷ்டாக்கை கோபப்படுத்தியது.
தனது பிறந்த குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு, முஸ்லிம் ஆண்களுக்கு மட்டுமே பொழுதுபோக்கு உரிமை இருப்பதாக ஏன் கருதப்படுகிறார்கள் என்று கேள்வி எழுப்பி ஒரு சக்திவாய்ந்த கட்டுரையை எழுதினார்.
அவர் அதை லங்கேஷ் பத்திரிகைக்கு அனுப்பினார், சில நாட்களுக்குள் அது வெளியிடப்பட்டது. அந்தத் தருணம், சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது என்றும், இது அவரது பொது எழுத்துப் பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது என்றும் அவர் கூறினார்.
அவரது துணிச்சலான, நேர்மையான எழுத்து பெரும்பாலும் அவரை ஓர் இலக்காக மாற்றியது. குறிப்பாக, மசூதிகளில் பிரார்த்தனை செய்யும் பெண்களின் உரிமையைப் பகிரங்கமாக ஆதரித்த பிறகு இது வலுவடைந்தது.
2000-ஆம் ஆண்டில், அவருக்கு அச்சுறுத்தல் தொலைப்பேசி அழைப்புகள் வந்தன. அவருக்கு எதிராக ஒரு பத்வா பிறப்பிக்கப்பட்டது.
மேலும், தனது எழுத்துக்காக ஒரு நபர் தன்னை கத்தியால் தாக்க முயன்றதாகவும், ஆனால் அவரது கணவரால் அந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பானு முஷ்டாக்கின் படைப்புகள் கர்நாடக சாகித்ய அகாடமி விருது மற்றும் தானச் சிந்தாமணி அத்திமாப்பே விருது உட்படப் பல கௌரவங்களைப் பெற்றுள்ளன.