இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் சர்வதேச ரீதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய சிக்கன் குன்யா வைரஸ் மீண்டும் பரவும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் ( WHO) எச்சரித்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிகாரி டயானா ரோஜாஸ் அல்வாரெஸ் கருத்துத் தெரிவிக்கையில்,
‘சுமார் 56 நாடுகளில், 119 பில்லியன் மக்கள் சிக்கன் குன்யா தொற்று ஏற்படும் அபாயமுள்ள பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது மடகாஸ்கர், சோமாலியா, கென்யா ஆகிய நாடுகளில் சிக்கன் குன்யா பரவத் தொடங்கியுள்ளது. இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் அதிகளவான பாதிப்புக்களும் பதிவாகியுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிக்கன் குன்யா பரவல் தொடருமானால், அது உலகளாவிய சுகாதாரத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும் என்பதால், அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
2000ஆம் ஆண்டு முதல் பரவத் தொடங்கிய சிக்கன் குன்யா வைரஸ், கடந்த காலத்தில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் அதே அளவிலான அபாயம் உருவாகும் சாத்தியம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.